கோல்கத்தா: பெங்களூரில் மனைவியைக் கொலை செய்த ஆடவர் ஒருவர், பின் விமானத்தில் ஏறி கோல்கத்தா சென்று அங்கு தன் மாமியாரைச் சுட்டுக்கொன்று, தன் உயிரையும் மாய்த்துக்கொண்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அமித் அகர்வால் என்ற அந்த 42 வயது பட்டயக் கணக்கர், பல ஆண்டுகளுக்கு முன் ஷில்பி என்பவரை மணந்தார். அவர்களுக்குப் பத்து வயதில் ஒரு மகன் இருக்கிறான். ஆயினும், கருத்து வேறுபாடு காரணமாக அமித்தும் ஷில்பியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலையில் கோல்கத்தாவில் இருக்கும் தனது மாமனாரின் வீட்டிற்குச் சென்றார் அமித். அங்கு அவருக்கும் அவரின் மாமனார் - மாமியாருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.
ஆத்திரமடைந்த அமித், திடீரென துப்பாக்கியை எடுத்து, தன் மாமியார் லலிதாவைச் சுட்டுக்கொன்றார். இதைக் கண்டு அதிர்ந்த அவரின் மாமானார் சுபாஷ், வெளியே ஓடிச் சென்று, உதவி கோரி கூக்குரலிட்டார். அதற்குமுன் வீட்டுக் கதவையும் அவர் பூட்டிவிட்டார்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டினுள் சென்று பார்த்தபோது அமித்தும் லலிதாவும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அருகிலேயே ஒரு துப்பாக்கியும் இருந்தது.
அமித் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்ததையும் போலிசார் கண்டெடுத்தனர். அதில், 'பெங்களூரில் தன் மனைவியைக் கொன்று விட்டதாக' அமித் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, பெங்களூரு காவல்துறையினருக்குத் தகவல் தரப்பட்டது. சற்று நேரத்தில், ஷில்பியின் மரணத்தை பெங்களூரு காவல் உதவி ஆணையர் உறுதிப்படுத்தினார்.
அமித்-ஷில்பி தம்பதியின் மகன் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறிய கோல்கத்தா காவல்துறை, ஆனாலும் அவனது இருப்பிடம் பற்றிய தகவலை வெளியிடவில்லை.

