புதுடெல்லி: இந்தியா-சீனா எல்லையில் உள்ள லடாக் பகுதியில், ராணுவத்தினர் பழைய நிலைக்குத் திரும்புவதற்கு நாளாகும் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையில் தளபதிகள் நிலையில் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடந்தது. அதற்குப் பிறகு உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் நிலையில் பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
சீன ராணுவத்தின் மீது இந்திய ராணுவத்தினர் கொண்டிருந்த நம்பிக்கை இப்போது பெரிதும் குறைந்து இருக்கிறது என்று தகவல் வட்டாரங்கள் கூறின.
லடாக் பகுதிக்கு இரண்டு நாள் வருகை மேற்கொண்டிருந்த இந்திய ராணுவத் தலைவர் ஜெனரல் எம்எம் நரவனே, எல்லை நிலவரங்கள் பற்றி இந்திய அரசியல் தலைவர்களுக்கு விளக்கம் அளிப்பார் என்று நேற்று எதிர்பார்க்கப்பட்டது.
சீனா ஒரு பக்கம் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தாலும் எல்லையின் பல இடங்களிலும் துருப்புகளைக் குவித்துள்ளதாக இந்திய தரப்பில் கூறப்படுகிறது. அதேபோல இந்திய ராணுவமும் லடாக் எல்லைப் பகுதியில் படைபலத்தைக் குவித்து வருகிறது.
இந்நிலையில், லடாக் எல்லைப் பகுதியில் அண்மையில் சீனா நடந்துகொண்ட விதம் அந்த நாடு தன்னுடைய பக்கத்து நாடுகளுக்கு எதிராக பெரிய அளவில் நடத்தும் ராணுவ கோபமூட்டும் செயல்களின் ஒரு பகுதி என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமைதியான நாடுகளை ராணுவ ரீதியில் யார் மிரட்டினாலும் அதை அமெரிக்கா சகித்துக்கொள்ளாது என்று அந்த நாட்டின் பிரபலமான நாடாளுமன்ற பேராளர் டெட் யோஹோ தெரிவித்தார்.
அத்தகைய காரியங்களை நிறுத்திக் கொள்ளும்படி உலகம் எல்லாம் ஒன்று சேர்ந்து சீனாவிடம் கூறுவதற்கு இது தக்க தருணம் என்று அவர் தெரிவித்தார்.
கொவிட்-19 சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி பரந்த அளவிலான ராணுவ நட
வடிக்கையை அரங்கேற்றி வருகிறது என்றும் இந்தியா, ஹாங்காங், தைவான், வியட்னாம் ஆகியவை அந்த நடவடிக்கையின் இலக்கு என்றும் யோஹோ கூறினார்.

