இந்தியாவுடன் யாரும் மோத முடியாது: மோடி எச்சரிக்கை

2 mins read
fbf1a31c-8595-4457-8726-e1fd0aeca096
லடாக் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான 'லே' பகுதியில் தற்போது அமைதி நிலவுகிறது. எனினும் லடாக் எல்லையில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி -

புதுடெல்லி: துணிச்சல் மிகுந்த இந்திய ராணுவத்தினர் நாட்டின் கௌரவத்துக்குக் களங்கம் ஏற்பட அனுமதிக்க மாட்டார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நேற்று வானொலி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றிய அவர், கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் அத்துமீறலில் ஈடுபட்டவர்களுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி தந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

நாட்டின் எல்லையையும் இறையாண்மையையும் பாதுகாப்பதில் இந்தியாவின் வலிமையான நிலைப்பாட்டை உலக நாடுகள் தற்போது பார்த்துக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், நட்புறவுக்கு இந்தியா எப்போதும் மரியாதை அளிக்கும் என்றார்.

எந்தவிதமான அத்துமீறல்கள் இருந்தாலும் எந்தவித தயக்கமும் இன்றி இந்தியா பதிலடி கொடுக்கும் என்றும் தீரம் மிகுந்த இந்திய ராணுவத்துக்கு நாடு தலைவணங்குகிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

"ராணுவம்தான் இந்தியாவைப் பாதுகாப்பாக வைத்துள்ளது. அவர்களின் வீரம் எப்போதும் நினைவில் கொள்ளப்படும். மேலும் லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகம் என்றென்றும் போற்றப்படும்.

"இந்தியாவுடன் யாரும் மோத முடியாது. லடாக்கில் வீரமரணம் அடைந்த குந்தன் குமாரின் தந்தை தனது பேரன்களையும் ராணுவத்துக்கு அனுப்பப் போவதாகக் கூறியுள்ளார்.

"ராணுவ வீரர்களின் குடும்பங்கள் செய்துள்ள மகத்தான தியாகங்கள் போற்றுதலுக்கு உரியவை," என்றார் பிரதமர் மோடி.

தாய்நாட்டுக்குத் துன்பத்தை தந்தால் அதை அனுமதிக்க இயலாது என்று குறிப்பிட்ட அவர், நம்முடைய தேசத்தை வலிமையாகவும் தற்சார்பு உடையதாகவும் மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

"இதுதான் வீரமரணம் அடைந்த நமது ராணுவ வீரர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்," என்று பிரதமர் மோடி தமது உரையில் மேலும் குறிப்பிட்டார்.