திருமணத்தில் பங்கேற்ற 16 பேருக்கு கிருமித்தொற்று

திருமணத்தில் பங்கேற்ற 16 பேருக்கு கிருமித்தொற்று

1 mins read

ஜெய்ப்பூர்: திருமண நிகழ்ச்சி மூலம் ராஜஸ்தானில் 16 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டது. ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து மணமகனின் தந்தைக்கு 6.26 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த கிஷுலால் ரதி என்பவரது மகனுக்கு கடந்த 13ஆம் தேதி திருமணம் நடந்தது.

இதில் பங்கேற்க அரசு விதிமுறைகளை மீறி ஐம்பதுக்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுத்திருந்தார் கிஷுலால்.

இந்நிலையில் இந்த நிகழ்வில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டது.

அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர பட் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து திருமண நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த கிஷுலால் ரதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

திருமண நிகழ்வில் பங்கேற்றதால் கொவிட்-19 நோய் தாக்கியவர்களைத் தனிமைப்படுத்தவும் பரிசோதனை நடத்தவும் உணவு வழங்கவும் ஏற்பட்ட செலவுகளை ஈடுகட்டவே அபராதம் விதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.