புதுடெல்லி: கொரோனா கிருமித் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில் சனிக்கிழமை ஒரே நாளில் நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரம் பேருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதியானது.
கடந்த 6 நாட்களில் மட்டும் இந்தியாவில் 1 லட்சம் பேருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று காலை நிலவரப்படி இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5.78 லட்சமாக அதிகரித்துள்ளது எனவும் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 16,095 என்றும் மத்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதேவேளையில் கொவிட்-19 பிடியில் இருந்து 3,09,713 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கிருமித் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட முதல் நாளில் துவங்கி அடுத்த 110 தினங்களில் ஒரு லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகினர். ஆனால் தற்போது கடைசி 39 நாட்களில் மட்டுமே 4 லட்சம் பேருக்கு கிருமி தொற்றியுள்ளது. குறிப்பாக ஜூன் 1ஆம் தேதியிலிருந்து 27ஆம் தேதி வரை மட்டும் 3.18 லட்சம் பேர் கிருமித் தொற்றால் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
கொரோனா கிருமித் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இதற்கிடையே உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொவிட்-19 பாதிப்பு குறைவுதான் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மற்றும் இறப்பு விகிதம் உள்ளிட்டவை இந்தியாவில் குறைவு என்றும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் தொற்றுப் பரவல் குறைந்துள்ளது என்றும் அவரர் கூறியுள்ளார்.
மேலும் குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இனிமேல்தான் மக்கள் மிகக் கவனமாக இருக்கவேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
"இடர்கள் வருகின்றன; சங்கடங்கள் வருகின்றன. இதன் காரணமாக நடப்பு 2020ஆம் ஆண்டினை மோசமான ஆண்டாக நாம் கருதவேண்டுமா? முந்தைய 6 மாதங்கள் கழிந்த விதத்தைப் பார்த்து நடப்பாண்டு முழுவதுமே மோசமானது என முடிவு செய்வது சரியல்ல.
"நம் நாட்டின் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் எத்தனையோ இடர்கள், சங்கடங்களை எல்லாம் கடந்து அவற்றை வெற்றி கொண்டு மேலும் ஒளிவிட்டுப் பிரகாசித்து வந்திருப்பது தெரியவரும்," என்றார் பிரதமர் மோடி.

