லடாக் வான் பகுதியில் இந்தியப் போர் விமானங்கள் தீவிரக் கண்காணிப்பு

தற்காப்புக் கலை வீரர்களை எல்லைக்கு அனுப்பியது சீனா

புதுடெல்லி: இந்திய-சீனா எல்லைப் பகுதியில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் தனது ராணுவத்தினருக்கு உதவும் வகையில் தற்காப்புக் கலைப் பயிற்சியாளர்கள், வீரர்களை எல்லைப் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது சீன அரசு.

முதற்கட்டமாக 20 பயிற்சியாளர்களும் வீரர்களும் எல்லைப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

அண்மையில் இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் நிகழ்ந்த மோதலின்போது இந்தியத் தரப்பில் 20 வீரர்களும் சீனத் தரப்பில் 43 பேரும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி இருதரப்பு வீரர்களும் எல்லையில் ஆயுதங்களைப் பயன்படுத்த இயலாது.

இந்நிலையில் தற்காப்புக் கலையில் நன்கு தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களை சீன ராணுவம் எல்லைக்கு அனுப்பியிருப்பது பரபரப்புக்கும் புதிய சர்ச்சைக்கும் வித்திட்டுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கு, திபெத் பள்ளத்தாக்கிற்கு சீனாவில் உள்ள ‘என்போ ஃபைட் கிளப்’ என்ற அமைப்பில் இருந்து இந்த வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களது வருகையால் தங்களது படையின் பலம் அதிகரித்துள்ளது எனவும் சீன ராணுவ உயரதிகாரியான வாங் ஹாய் ஜியாங் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்திய வீரர்களுடனான மோதலின்போது இந்த தற்காப்புக் கலையில் தேர்ச்சி பெற்ற வீரர்களும் பயிற்சியாளர்களும் ஈடுபட்டனரா என்பது குறித்து சீனத்தரப்பு இன்னும் தகவல் வெளியிடவில்லை.

இதற்கிடையே இரு நாடுகளும் தங்கள் எல்லையில் படைகளைக் குவித்துள்ளன. லடாக் வான் பகுதியில் இந்தியப் போர் விமானங்கள் அவ்வப்போது சுற்றுக் காவல் பணியில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.

தமது படைபலத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்திய ராணுவத்தின் போர் விமானங்கள் லடாக் வான் பகுதியில் வலம் வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.