நோயாளியின் உருக்கமான காணொளிப்பதிவு

“என்னால் இதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியும் எனத் தோன்றவில்லை. என் இதயமே நின்று போனதாகத் தோன்றுகிறது. போய் வருகிறேன் அப்பா’,” என்று அந்த ஆடவர் கண்ணீர் மல்க பேசும் காட்சி அந்தக் காணொளியில் பதிவாகி உள்ளது.

ஹைதராபாத்: கொவிட்-19 நோயாளி ஒருவர் தமக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறும் காணொளிப் பதிவு தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த அந்த 34 வயது ஆடவருக்கு கடந்த 26ஆம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 28ஆம் தேதியன்று தனது நிலை குறித்து விவரிக்கும் காணொளிப் பதிவு ஒன்றை தந்தைக்கு அனுப்பி வைத்துள்ளார் அந்த ஆடவர்.

அதில், ‘அப்பா... என்னால் மூச்சுவிட முடியவில்லை. எனக்கு பிராணவாயு அளித்து உதவி செய்யுமாறு மன்றாடிக் கேட்டும் பலனில்லை. கடந்த 3 மணி நேரமாக நான் தவிக்கிறேன்.

“என்னால் இதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியும் எனத் தோன்றவில்லை. என் இதயமே நின்று போனதாகத் தோன்றுகிறது. போய் வருகிறேன் அப்பா’,” என்று அந்த ஆடவர் கண்ணீர் மல்க பேசும் காட்சி அந்தக் காணொளியில் பதிவாகி உள்ளது.

இந்தக் காணொளியைத் தன் தந்தைக்கு அனுப்பிய சிறிது நேரத்தில் அவர் இறந்து போனார். தனது மகனுக்குச் சிகிச்சை அளிக்குமாறு 10 தனியார் மருத்துவமனைகளை அணுகியபோது அம்மருத்துவ மனைகளின் நிர்வாகங்கள் சிகிச்சை தர மறுத்துவிட்டதாக இறந்துபோன ஆடவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

“என் மகனுக்கு இறுதிச்சடங்கை முடித்துவிட்டு வீடு திரும்பிய பிறகே அந்தக் காணொளியைப் பார்க்க நேர்ந்தது. என் மகனின் குரல் என் இதயத்தையே நொறுக்குவதாக உள்ளது,” என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அந்த ஆடவர் உயிரிழந்ததாக அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.