லடாக் எல்லையில் ராணுவ வீரர்களைச் சந்தித்தார் பிரதமர் மோடி

லடாக் எல்லையில் ராணுவ வீரர்களைச் சந்தித்தார் பிரதமர் மோடி

2 mins read
1afa2953-248e-45c5-a231-60bb26c84473
லடாக் எல்லையில் ராணுவ வீரர்களிடையே பேசிய மோடி, எல்லையை விரிவாக்கும் யுகம் முடிந்துவிட்டது என்றார். படம்: ஏஎஃப்பி -

புதுடெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் நிலவும் வேளையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று லடாக் எல்லைப் பகுதிக்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள நிலவரத்தை நேரில் ஆய்வு செய்தார்.

சுமார் 11,000 அடி உயரம் கொண்ட லடாக்கின் நிம்பு பகுதியில் மோடிக்கு ராணுவத்தினர் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று மீண்டும் ராணுவத்தில் இணைந்த வீரர்களையும் அவர் சந்தித்துப் பேசினார்.

பின்னர் ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய திரு மோடி, "இந்திய வீரர்களின் மன உறுதி மலையைப் போல பலமானது," என்று பாராட்டினார்.

"நாம் புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணர்கள்தான் என்றாலும் நம்மிடம் சுதர்சன சக்கரமும் இருக் கிறது. நாட்டின் நிலப்பரப்பை அதிகரிக்கப் பேராசையுடன் செயல் பட்டவர்கள்தான் எப்போதும் வீழ்ச்சி அடைந்துள்ளனர்," என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

தனது உரையில் 'மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு' என்ற திருக்குறளை அவர் மேற்கோள் காட்டினார்.

"வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழியில் நடத்தல், தலை வனின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படை வீரனுக்குத் தேவையான பண்புகள்," என்று குறளுக்கு அவர் விளக்கமளித்தார்.

முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத், ராணுவத் தலைமை தளபதி எம்.எம். நரவணே ஆகியோரும் பிரதமருடன் சென்றனர். அண்மையில் லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். ஆனால் சீனாவின் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்பு, சேதம் பற்றி அந்நாடு எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் மோடியின் பயணம் பற்றி கருத்து தெரிவித்த சீனாவின் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர், "பதற்றத்தை தணிக்கும் பணியில் இந்தியாவும் சீனாவும் ராணுவ மட்டத்திலும் அரசதந்திர ரீதியிலும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

"இந்த நேரத்தில் எந்த ஒரு தரப்பும் பதற்றத்தை அதிகரிக்கும் எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது," என்று கூறியுள்ளார்.