நூறு வயதைக் கடந்தும் கொரோனாவுக்கு எதிராக போராடி குணமடைந்த முதியவர்கள்

1 mins read
9f0530cc-931e-4484-9fd4-2a9530405e84
தானேயைச் சேர்ந்த திரு ஆனந்தி ஜா, வேதாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கொவிட்-19 தொற்று இருந்தாலும் திரு ஆனந்திக்கு காய்ச்சல் மட்டுமே இருந்ததாகவும் அவருக்கு மூச்சுத் திணறலோ, ரத்தத்தில் ஆக்சிஜன் குறைவோ ஏற்படவில்லை என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மோகன் பன்சாலி குறிப்பிட்டார். படம்: இந்திய ஊடகம் -

மகாராஷ்டிர மாநிலத்தின் ஆக மூத்த கொவிட்-19 நோயாளியான 104 வயது ஆனந்தி ஜா, மன உறுதியுடன் போராடி, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

கம்பை ஊன்றியபடி, மகன் முகேஷ், 48, உதவியுடன் வீட்டுக்குத் திரும்பிய அவரைக் கண்ட அந்தத் தெரு வாசிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

திரு ஆனந்தி ஜாவுக்கு, கட்டுமானத் தளத்தில் பணிபுரியும் அவரது மகன் முகேஷிடமிருந்து கொரோனா தொற்று ஏற்பட்டது.

திரு முகேஷ், அவரது மூன்று பிள்ளைகள் ஆகியோருக்கும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் 14 நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

தானேயைச் சேர்ந்த திரு ஆனந்தி ஜா, வேதாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கொவிட்-19 தொற்று இருந்தாலும் திரு ஆனந்திக்கு காய்ச்சல் மட்டுமே இருந்ததாகவும் அவருக்கு மூச்சுத் திணறலோ, ரத்தத்தில் ஆக்சிஜன் குறைவோ ஏற்படவில்லை என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மோகன் பன்சாலி குறிப்பிட்டார்.

அதேபோல, பாகிஸ்தானில் 105 வயதாகியுள்ள பசல் ரவுப் என்பவரும் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளார்.

அங்குள்ள பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான இவர், கொரோனா தொற்று பாதிப்பு உறுதியான நாளில் இருந்து மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அவர் குணம் அடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பெரும்பாலும் வயதானவர்களுக்கே கிருமித்தொற்றின் தாக்கம் அதிகம் இருப்பதாகக் கூறப்படும் இவ்வேளையில், கொரோனாவுக்கு எதிரான இவ்விருவரது போராட்ட குணம் கேட்போரைத் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்