சுடச் சுடச் செய்திகள்

துபாய் விமான நிலையத்தில் தூங்கியதால், மீட்பு விமானத்தை தவறவிட்ட இந்தியர்

கொரோனா கிருமித்தொற்று காரணமாக அனைத்துலக விமான சேவைகள் முடங்கியுள்ள நிலையில், ஐக்கிய அரபு நாடுகளில் சிக்கித் தவிக்கும், கேரளாவைச் சேர்ந்த இந்தியர்களைத் தாயகத்துக்கு அழைத்து வருவதற்காக, கேரள முஸ்லிம் கலாசார மையம், ஜம்போ ஜெட் ராட்சத விமானத்துக்கு ஏற்பாடு செய்தது.

அதில் 427 பேரை அழைத்து வர திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்குத் திரும்பி வர விரும்பி, அபுதாபியில் பணிபுரிந்து வந்த 53 வயது ஷாஜகான் என்பவர் 1,100 திர்ஹாம் (சுமார் 400 சிங்கப்பூர் வெள்ளி) செலுத்தி பதிவு செய்திருந்தார்.

ஊருக்கு வரும் ஆர்வத்தால், பயணத்துக்கு முந்தைய நாள், அதாவது, கடந்த புதன்கிழமை இரவு முழுவதும் தூங்காமல் ஆயத்தங்களைச் செய்து, பயண தேதியன்று காலையிலேயே துபாய் விமான நிலையத்துக்கு வந்தார்.

விமான நிலைய பரிசோதனை, இதர நடைமுறைகளை முடித்த அவர், பிற்பகல் 2 மணியளவில் விமானத்தில் ஏறுவதற்காக காத்திருக்கும் இடத்தில் அமர்ந்திருந்தார்.

தூக்கம் கண்ணைக் கட்டவே, மாலை 4.30 மணியளவில் லேசாகக் கண்ணயர்ந்தார்.

கண் விழித்துப் பார்த்தபோது, அவர் ஏற வேண்டிய விமானம் புறப்பட்டுச் சென்றுவிட்ட செய்தி மட்டுமே காத்திருந்தது.

விசா காலாவதியாகி விட்டதால், விமான நிலையத்தை விட்டு அவர் வெளியே வர முடியாத நிலையில், கையில் இருந்த பணத்தில் விமானச் சீட்டு வாங்கிவிட்டதால், சாப்பிடக்கூட பணம் இல்லாமல் தவித்தார் ஷாஜகான். 

இதுகுறித்து தகவல் அறிந்து, கேரள முஸ்லிம் கலாசார மையத்தின் அமைப்புச்செயலாளர் ஜாசிம்கான் கள்ளம்பலம், கடந்த வெள்ளிக்கிழமை விமான நிலையத்துக்கு சென்று, அவருக்கு செலவுக்கு பணம் கொடுத்து உதவியதாகக் கூறப்பட்டது.

இதுபற்றி விமான பயண ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த நிஜாமுதீன் ,“விமானம் புறப்பட்டுச் சென்ற பின்னர் கண் விழித்து பார்த்த ஷாஜகான் அதிர்ச்சியில் உறைந்து போனார். அவர் எங்களை தொடர்பு கொண்டு நடந்ததை சொன்னார். ஷாஜகானை, விமான நிறுவன அதிகாரிகள் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் போனதால், அவரை விட்டுவிட்டு  விமானம்  புறப்பட்டுச் சென்றது. சனிக்கிழமை (ஜூலை 4) புறப்படவிருக்கும் அடுத்த எமிரேட்ஸ் விமானத்தில் அவரை அனுப்பி வைக்க முயற்சி செய்வோம்” என குறிப்பிட்டார். தூக்கத்தால் விமானத்தை தவற விட்ட ஷாஜகான், அடுத்த விமானத்துக்காக இப்போது காத்திருக்கிறார்.

கடந்த மார்ச் மாதமும் இதே போன்று இன்னொரு இந்தியர் தூக்கத்தால் விமானத்தை தவற விட்டு விட்டு, ஊரடங்கால் 50 நாட்களாக காத்திருந்து நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon