லடாக்: சீன எல்லைப் பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பை இந்தியா தீவிரப்படுத்தி வருகிறது. நேற்று இரவு எல்லையில் தீவிரக் கண்காணிப்புப் பணியில் இந்திய விமானங்கள் ஈடுபட்டன.
போர் விமானங்களான மிக் -29, சுகோய் 30 எம்.கே.ஐ. அப்பாச்சி தாக்குதல் ரக விமானங்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தியா, சீனா இடையிலான மோதல் மட்டுமல்லாமல் எந்த நாட்டின் பிரச்சினையிலும் வலிமையான நட்புறவுக்கு அமெரிக்க ராணுவம் தொடர்ந்து துணை நிற்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தென்சீனக் கடலில் பல தீவுகளை சீனா ஆக்கிரமித்து வருவதாக பிலிப்பீன்ஸ், தைவான், புருணை உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதைத்தொடர்ந்து தென்சீனக் கடல் பகுதிக்கு இரு விமானம் தாங்கிக் கப்பல்களை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.
கடந்த மாதம் 15ஆம் தேதி நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.
எல்லையில் சீனா கூடுதல் படைகளைக் குவித்ததை அடுத்து இந்தியாவும் அங்கு படைபலத்தை அதிகரித்ததால் பதற்றம் நிலவியது. ராணுவத் தளபதி நரவானே அண்மையில் லடாக் பகுதிக்குச்சென்று அங்குள்ள நிலவரத்தை ஆய்வு செய்தபின், பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை அப்பகுதிக்குச் சென்று எல்லைப் பாதுகாப்பு குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் இருதரப்பும் படைகளை விலக்கிக்கொண்டுள்ளன. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இருந்த சீனப் படைஅங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பின்வாங்கியது. அத்துடன் அங்கிருந்த கூடாரங்கள், தற்காலிகக் கட்டுமானங்களையும் அவர்கள் அகற்றினர்.

