கொவிட்-19 அச்சத்தால் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண்

கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற பலத்த சந்தேகத்தின் பேரில் ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த இரக்கமற்ற செயல் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்தது.

அண்மையில் டெல்லியில் இருந்து ஷிகோகாபாத்துக்குச் சென்ற பேருந்தில் 19 வயதான அன்ஷிகா யாதவ் என்ற இளம்பெண் தன் தாயாருடன் பயணம் செய்துள்ளார். 

அப்போது அவரிடம் கிருமித் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுவதாக சக பயணிகளில் சிலர் சந்தேகமடைந்தனர். இதையடுத்து திடீரென அப்பேருந்து நிறுத்தப்பட்டது. 

ஓட்டுநரும் நடத்துநருமாகச் சேர்ந்து அப்பெண்ணுக்கு ஒரு போர்வையைப் போர்த்தி, பின்னர் குண்டுக்கட்டாகத் தூக்கி பேருந்துக்கு வெளியே வீசினர். 

தனது மகளை விட்டுவிடுமாறு அன்ஷிகாவின் தாயார் கதறியுள்ளார். அதைப் பொருட்படுத்தாத சக பயணிகள்  அன்ஷிகாவைப் பேருந்தில் இருந்து வெளியேற்றுவதில் உறுதியாக இருந்துள்ளனர்.

நெடுஞ்சாலையில் தூக்கி வீசப்பட்ட அன்ஷிகா அடுத்த சில நிமிடங்களில் அங்கேயே உயிரிழந்துள்ளார். 

இது தொடர்பாக வெளியான செய்தி உத்தரப்பிரதேசத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இது குறித்து டெல்லி மகளிர் ஆணையம் போலிசில் புகார் அளித்ததின் பேரில் விசாரணை நடந்து வருகிறது. 

பிரேதப் பரிசோதனையில் அன்ஷிகா மாரடைப்பால் இறந்தது உறுதியாகி உள்ளது. 

தனது சகோதரி ஆரோக்கியமாக இருந்ததாகவும் சம்பவத்தன்று கடும் வெயில் நிலவியதால் அவர் சோர்வுடன் காணப்பட்டதாகவும் அன்ஷிகாவின் சகோதரர் தெரிவித்துள்ளார்.