புரோட்டா முதல் வைரங்கள் வரை... முகக்கவசத்தின் புதிய அவதாரங்கள்

கொரோனா கிருமிப் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், விதவிதமான முகக்கவச உற்பத்தியில் மக்கள் தங்களது புத்தாக்கத்தைப் புகுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் பலர் பிரபலங்களின் படத்தைக் காட்டும் முகக்கவசங்கள் அணிவது சாதாரணமாகிவிட்ட நிலையில், மகாராஷ்டிராவில் ஒருவர் தங்கத்தில் முகக்கவசம் அணிந்து அண்மையில் பிரபலமானார்.

ஆனால், சூரத்தில் உள்ள நகைக்கடை இதற்கு எல்லாம் ஒரு படி மேலே சென்று வைரம் பதித்த முகக்கவசங்களை விற்பனைக்கு வைத்துள்ளது. 

வைரம் பதித்த இந்த முகக்கவசங்கள் ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரையிலான விலையில் நகைக்கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர் ஒருவர் தம் வீட்டில் நடத்தப்படும் திருமணத்திற்காக  தனித்துவம் மிகுந்த முகக்கவசத்தை மணமக்களுக்குத் தயாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்ததையடுத்து, இந்த யோசனை ஏற்பட்டதாக நகைக் கடையின் உரிமையாளர் தீபக் சோக்ஸி கூறியுள்ளார்.

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தின் திருப்பூரில் உணவுக்கடை ஒன்றில் முகக்கவச வடிவிலான புரோட்டாவைச் செய்து அசத்தி வருகிறார் உரிமையாளர் சுப்பிரமணியம்.

வழக்கமான புரோட்டாவை விட இது வித்தியாசமாக இருப்பதால், விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாகவும் அமைகிறது என்கிறார் திரு சுப்பிரமணியம்.

முகக்கவச புரோட்டாவின் விலை அதிகமில்லை; 50 ரூபாய்தான்!