62 வழக்குகள் இருந்தும் பஞ்சாயத்து தலைவராக அமர்க்களப்படுத்திய விகாஸ் துபே

62 வழக்குகள் இருந்தும் பஞ்சாயத்து தலைவராக அமர்க்களப்படுத்திய விகாஸ் துபே

2 mins read
a954bff2-a458-4b27-94ad-27b125020f03
மத்தியப்பிரதேச போலிசாரிடம் சிக்கிய விகாஸ் துபே, பின்னர் உ.த்தரப்பிரதேச போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டான். படம்: ஊடகம் -

எட்டு போலிசாரை சுட்டுக்கொன்று பின்னர் போலிசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ரவுடி விகாஸ் துபே குறித்துப் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த விகாஸ் துபே மீது 5 கொலை வழக்குகள் உட்பட 62 வழக்குகளை உத்தரப்பிரதேச போலிசார் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவனை விசாரிக்க கான்பூர் போலிசார் சென்றபோது யாரும் எதிர்பாராத வகையில் விகாஸ் துபேயின் கூட்டாளிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இத்தாக்குதலில் இரண்டு உயரதிகாரிகள் உட்பட எட்டு போலிசார் உயிரிழந்தனர்.

இந்நிலையில் மத்தியப்பிரதேச போலிசாரிடம் அவன் சிக்கினான். பின்னர் உ.த்தரப்பிரதேச போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டான். எனினும் மறுதினமே போலிசாரிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தபோது அவன் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1999ஆம் ஆண்டு தனது சொந்த கிராமத்தைச் சேர்ந்த ஜுன்னா பாபா என்பவரைக் கொலை செய்து அவரது சொத்துக்களை அபகரித்துக் கொண்டதாக விகாஸ் துபே மீது வழக்குப் பதிவானது.

அதன் பின்னர் உள்ளூர் காவல் நிலையத்தில் நுழைந்து பாஜக தலைவரைச் சுட்டுக் கொன்றது, 2000வது ஆண்டில் தனது பள்ளி ஆசிரியரையும் ஓய்வுபெற்ற பள்ளி முதல்வரையும் கொலை செய்தது உள்ளிட்ட வழக்குகளும் அவன் மீது பதிவாகின.

இதன் பிறகு கடந்த 2006ஆம் ஆண்டு அரசியலில் கால்பதித்த விகாஸ் பஞ்சாயத்து தலைவரானான். பின்னர் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, விகாசின் தம்பி, அவரது மனைவி ஆகியோரும் அடுத்தடுத்து பஞ்சாயத்து தலைவர்களாகத் தேர்வாகினர்.

கடந்த 30 ஆண்டுகளாக உத்தரப்பிரதேச போலிசாரை ஆட்டிப்படைத்து வந்த விகாஸ் மீது ரவுடிகள் சட்டம், குண்டர்கள் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவாகி உள்ளன. மேலும், அவருக்கு உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 22 வீடுகள் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்