உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

மும்பை: ஆசியாவில் ஆகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

சுமார் 6.5 லட்சம் பேர் வசிக்கும் தாராவியில் கடந்த ஏப்ரல் முதல் தேதி கொரோனா கிருமித்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அங்கு துரிதகதியில் கிருமித்தொற்று பரவிய நிலையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதன் பலனாக அன்றாடம் பதிவாகும் நோய்த்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று அங்கு புதிதாக 12 பேருக்கு கிருமித்தொற்று உறுதியானது.

போதிய வசதி இல்லாத தாராவியில் கொவிட்-19 நோயால் பெரும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதால் உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.