கொரோனா பிடியில் அமிதாப் குடும்பம்

கொரோனா பிடியில் அமிதாப் குடும்பம்

1 mins read
336cdbf0-728f-4af0-9bb2-916fd391109c
-

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் குடும்பத்தில் நான்கு பேருக்கு கொரனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நால்வரும் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் அமிதாப்புக்கு 'கொவிட் 19' பரிசோதனை நடைபெற்றது. அதில் தொற்று உறுதியானதை அடுத்து அவரது குடும்பத்தாரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

கடந்த பத்து தினங்களில் தன்னுடன் நெருக்கமாக இருந்த அனைவரையும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு சமூகவலைத்தளம் வழி அமிதாப் வேண்டுகோள் விடுத்தார். அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொவிட்-19 பாதிப்பு இருப்பது நேற்று முன்தினம் உறுதியானது.

இந்நிலையில், அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யா ராய்க்கும், இவர்களது மகள் ஆராதயாவுக்கும் கொவிட்-19 நோய் பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் உலகெங்கிலும் உள்ள இந்திய சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அமிதாப் பச்சன் குடும்பத்தார் விரைவில் நலமடைய பிரார்த்திப்பதாக திரையுலகப் பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

அமிதாப்புக்கு நோய்த்தொற்றுக்கான லேசான அறிகுறிகள் மட்டுமே தென்படுவதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடிகர்கள் தனுஷ், மகேஷ்பாபு, எஸ்.ஜே. சூர்யா, மோகன்லால், துல்கர் சல்மான், ரகுல் பிரீத்சிங், சோனம் கபூர் உள்ளிட்ட ஏராளமானோர் அமிதாப் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர்.