விகாஸ் துபேவுக்கு ரகசிய துப்பு: போலிஸ் அதிகாரிகள் கலக்கம்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்ட பிரபல ரவுடி விகாஸ் துபேவுக்கு அம்மாநில போலிசார் சிலர் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.

விகாஸ் துபேவுக்குக் காவல்துறை நடவடிக்கைகள் குறித்து துப்பு கொடுத்த நான்கு போலிசார் கைதாகியுள்ளனர்.

அவர்களில் துணை ஆய்வாளர் கிருஷ்ணகுமார் சர்மா என்பவர் போலிசாரால் என்கவுன்டர் செய்யப்பட வாய்ப்புள்ளதாக அவரது குடும்பத்தார் அச்சம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

கடந்த முப்பது ஆண்டுகளாக உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த விகாஸ் துபேவைக் கைது செய்ய, அண்மையில் அவர் பதுங்கியிருந்த பிக்ரு என்ற பகுதிக்கு தனிப்படை போலிசார் முற்றுகையிட்டனர். இந்த நடவடிக்கையை ரகசியமாக மேற்கொள்வதே காவல்துறையின் திட்டம்.

ஆனால் எதிர்பாராத விதமாக தனிப்படை போலிசார் மீது விகாஸ் துபேயின் கூட்டாளிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு அதிகாரிகள் உட்பட எட்டு போலிசார் கொல்லப்பட்டனர். இதையடுத்து நடைபெற்ற தீவிர விசாரணையில் பிக்ரு பகுதி காவல் ஆய்வாளர் வினய் திவாரி, துணை ஆய்வாளர் கிருஷ்ணகுமார் சர்மா உள்ளிட்ட நான்கு பேர் போலிசாரின் நடவடிக்கை குறித்து விகாஸ் துபேவுக்கு அவ்வப்போது துப்பு கொடுத்து வந்தது அம்பலமானது.

நால்வரும் கைது செய்யப்பட்ட பிறகு போலிசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின்போது விகாஸ் துபேயின் கூட்டாளிகள் மூவர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பின்னர் மத்தியப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட விகாஸ் உத்தரப்பிரதேச போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அதே தினத்தன்று அவரும் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமார் சர்மாவின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சட்டம் ஒழுங்கைக் காக்கவேண்டிய உத்தரப்பிரதேச போலிசார் அதைச் செய்யாமல் சட்டத்தைத் தாங்களே கையில் எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையால் கைது செய்யப்படுபவர்கள் அடுத்தடுத்து என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்படுவதாகச் சுட்டிக் காட்டியுள்ள அவர், தமது கணவரை அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி காக்கவேண்டியது அரசின் கடமை எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சுதந்திரமான விசாரணை அமைப்புக்கு இவ்வழக்கை மாற்றுவதுடன் வேறு மாநிலத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

எட்டு போலிசார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விகாஸ் துபே உள்ளிட்ட 21 பேர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது. இவர்களில் 7 குற்றவாளிகள் மட்டுமே உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!