குஜராத்தில் பிரதமரே வந்தாலும் ஊரடங்கு விதிகளை மீற விடமாட்டேன் என துணிச்சலாகப் பேசிய குஜராத் பெண் போலிஸ் தனது வேலையிலிருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமூக ஊகடங்களில் சிங்கப் பெண் என வர்ணிக்கப்பட்ட அவர், இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து போலிஸ் வேலையை துறந்து தமது துணிச்சலை மீண்டும் நிரூபித்துள்ளதாக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
சூரத் நகர் போலிஸ் கான்ஸ்டபிள் சுனிதா யாதவ், கடந்த புதனன்று இரவு மங்கத் சவுக் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுட்டிருந்தார்.
ஊரடங்கு நடப்பில் இருந்த வேளையில் ஐவர் கொண்ட கும்பல் ஒன்று விதிகளை மீறி முகக்கவசம் அணியாமல் காரில் சென்றது.
அவர்களை தடுத்து நிறுத்திய சுனிதா விதிகளை மீறியது தொடர்பாக கேள்வி கேட்டுள்ளார்.
சுகாதார அமைச்சர் குமார் கனானியின் மகனான பிரகாஷ் கனானி அந்தக் கும்பலில் இருந்தது தெரிய வந்தது.
சுனிதாவிடம் பிரகாஷ் வாக்குவாதம் செய்ததோடு மிரட்டியுள்ளார்.
பின்னர் சுனிதா மேலதிகாரிக்கு தகவல் தெரிவித்தபோது, அவரோ சம்பவ இடத்தைவிட்டு வெளியேறிவிடுமாறு கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இச்சம்பவங்களை உள்ளடக்கிய காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவியதும் ஏராளமானோர் சுனிதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில் அமைச்சரின் மகனும் அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே சுனிதா போலிஸ் தலைமை அலுவலகத்துக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதால் சுனிதா வேலையிலிருந்து விலகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


