பைலட்: நான் பாஜகவில் இணையமாட்டேன்

பைலட்: நான் பாஜகவில் இணையமாட்டேன்

2 mins read
d1a71001-66de-4bf1-beba-bf5f88e38659
சச்சின் பைலட். படம்: இந்திய ஊடகம் -

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சச்சின் பைலட், தாம் பாரதிய ஜனதா கட்சியில் இணையப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் தமக்கும் இடையே பிரச்சினைகள் இருப்பதை சச்சின் பைலட் ஒப்புக்கொண்டார்.

துணை முதல்வர் பதவியில்

இருந்து நீக்கப்பட்டுள்ளபோதிலும் தாம் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

தமக்கு ஏற்பட்ட அநீதியைப் பற்றி பிரயங்கா காந்தி வத்ராவிடம் முறையிட்டிருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை என்றார் அவர்.

முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய சச்சின் பைலட், தமக்கு 20க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக கூறியதை அடுத்து ராஜஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, கடந்த திங்கட்கிழமையன்றும் செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்றக் குழு கூட்டத்தையும் சச்சின் பைலட் புறக்கணித்தார்.

கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்தும் சச்சின் பைலட் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ப. சிதம்பரம் போன்ற தலைவர்கள் சச்சின் பைலட்டுடன் பேசி சமரச முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு பலன் அளிக்கவில்லை.

இதையடுத்து சச்சின் பைலட், அவருக்கு ஆதரவான இரண்டு அமைச்சர்கள் ஆகியோர் அமைச்சர் அவையிலிருந்து நீக்கப்பட்டனர். ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டு, கோவிந்த் சிங் நியமனம் செய்யப்பட்டார். அத்துடன் சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யும் பணியில் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், அரசுக்கு எதிராக செயல்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சபாநாயகரிடம் கொறடா புகார் மனு அளித்துள்ளார். இந்த மனு மீது சபாநாயகர் உடனடியாக நடவடிக்கையைத் தொடங்கி உள்ளார்.

கொறடா அளித்த புகார் தொடர்பாக சச்சின் பைலட் உள்ளிட்ட 19 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் நாளைக்குள் விளக்கம் அளிக்காவிட்டால் சச்சின் பைலட்டும் அவருக்கு ஆதரவாக இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களும் பதவி விலகியதாகக் கருதப்படும் என சபாநாயகர் கூறியுள்ளார்.

காங்கிரசில் நீண்டகாலமாக முன்னணித் தலைவராக இருந்து வரும் சச்சின் பைலட்டின் அடுத்தகட்ட நடவடிக்கையை அறிந்துகொள்ள அனைத்துக் கட்சிகளும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றன.

அவர் பாஜகவிற்கு வந்தால் வரவேற்பதாக அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் எந்த சூழ்நிலையிலும் பாஜகவில் சேரமாட்டேன் என சச்சின் பைலட் கூறியுள்ளார். சிலர் டெல்லியில் தலைமைப் பதவிகளில் உள்ளவர்களின் மனதில் நஞ்சைக் கலக்கும் வகையில், நான் பாஜகவில் சேர இருப்பதாக கூறுகின்றனர் என்றும் சச்சின் பைலட் கூறினார்.