பெங்களூரு: பெங்களூருவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். உயிரிழப்பும் மிக அதிகமாக உள்ளது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் 56 பேர் கொரோனா கிருமித்தொற்று காரணமாக மாண்டனர்.
இதையடுத்து, கொரோனாவை தடுக்கும் நோக்கத்தில் பெங்களூரு நகர் மற்றும் பெங்களூரு புறநகரில் நேற்று முன்தினம் இந்திய நேரப்படி இரவு 8 மணி முதல் ஒரு வார காலம் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்தார்.
அதன்படி பெங்களூரு நகர் மற்றும் புறநகரில் நேற்று முன்தினம் இந்திய நேரப்படி இரவு 8 மணி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது.
இதையடுத்து, பிற மாவட்டங்களில் இருந்து பெங்களூருவுக்குள் வரும் அனைத்துச் சாலைகளும் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இருந்து வரும் சாலை, அத்திப்
பள்ளியில் மூடப்பட்டுள்ளது.
மேலும் பெங்களூருவில்
10,000 க்கும் மேற்பட்ட சாலைகள் இரும்புத் தடுப்புகள் வைத்து மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் வாகனங்கள் சென்று வர மட்டும் ஒரு முக்கியமான சாலை மூடப்படாமல் விடப்பட்டுள்ளது. பெங்களூருவில் பொதுமக்களின் நடமாட்டத்தைத் தடுக்க
நகரம் முழுவதும் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
"ஊரடங்கின்போது அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. பொதுமக்கள் பயப்படாமல், ஊரடங்கு கட்டுப்பாடுகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். கொரோனாவைத் தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முதல்வர் எடியூரப்பா
வேண்டுகோள் விடுத்துள்ளார்.

