கொவிட்-19: இந்தியாவில் 2வது தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதனை தொடக்கம்

2 mins read
794d734a-4795-4058-abd9-bde8fe21c33b
இந்த நிலையில் ஜைடஸ் கேடிலா நிறுவனம், தனது தடுப்பூசியை 1000 பேருக்கு செலுத்தி பார்க்கும் சோதனையை தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ளது. படம்: ஊடகம் -

இந்தியாவில் கொரோனா கிருமிப் பரவல் அசுர வேகமெடுத்துள்ள நிலையில், ஒரே நாளில் 32,000க்கும் அதிகமானோருக்கு கிருமித்தொற்று பதிவானது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கையும் ஒரு மில்லியனை நெருங்குகிறது.

நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு நடப்பில் உள்ள நிலையில் கிருமித்தொற்று வெகுவாகப் பரவுவது கிலியை ஏற்படுத்தியுள்ள சூழலில், இயல்பு வாழ்க்கை எப்போது மீளும் என்ற கவலை மக்களை வதைக்கிறது.

தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டால்தான் மக்களின் வாழ்வாதாரம் காக்கப்படும் என்ற சூழல் நிலவுகிறது.

ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பூசியை எற்கெனவே மக்களுக்குச் செலுத்தும் பரிசோதனை தொடங்கியுள்ள நிலையில், தற்போது அகமதாபாத்தை சேர்ந்த ஜைடஸ் கேடிலா நிறுவனம் ஜைகோவ்-டி என்னும் தடுப்பூசியையும் மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்கும் நிலையை எட்டியுள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி, கொரோனா வைரஸ் திரிபுவில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் தடுப்பூசி, டி.என்.ஏ. அடிப்படையிலானது என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே, எலிகள், பன்றிகள் போன்ற விலங்குகளுக்குச் செலுத்தி பரிசோதித்ததில், கொரோனா கிருமிக்கு எதிரான தடுப்பு சக்தியை இந்த மருந்துகள் கொண்டிருப்பதாகவும் பக்க விளைவுகளை இதுவரை ஏற்படுத்தவில்லை என்றும் கூறப்பட்டுள்ள நிலையில், அவற்றை மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதலை வழங்கியுள்ளது.

இந்த நிலையில் ஜைடஸ் கேடிலா நிறுவனம், தனது தடுப்பூசியை 1000 பேருக்கு செலுத்தி பார்க்கும் சோதனையை தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த பரிசோதனையின்போது, தடுப்பூசியின் பாதுகாப்புத்தன்மை, சகிப்புத்தன்மை, நோய் எதிர்ப்புத்திறன் ஆகியவை சோதிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

இதன் முதல் கட்ட பாதுகாப்பு சோதனை 84 நாட்களில் முடியும்; இரண்டாவது கட்ட சோதனையின்போது, பாதுகாப்பு, செயல்திறன் சோதிக்கப்படும். இது அடுத்த 84 நாட்களில் நிறைவு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பரிசோதனைகள் வெற்றியடைந்தால் இவ்வாண்டின் இறுதியில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்