ஊழியர்கள் சிலரை ஐந்தாண்டுகள் வரை கட்டாய விடுப்பில் அனுப்ப யோசனை செய்யும் ஏர் இந்தியா

ஊழியர்கள் சிலரை ஐந்தாண்டுகள் வரை கட்டாய விடுப்பில் அனுப்ப யோசனை செய்யும் ஏர் இந்தியா

2 mins read
48303b28-54ae-4f1c-8c62-45d92c6bc2eb
ஏர் இந்தியா நிறுவனத்தின் பணியாளர்களில் சிலரை ஐந்து ஆண்டுகள் வரை கட்டாய விடுப்பில் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம்: ஊடகம் -

ஏர் இந்தியா நிறுவனத்தின் பணியாளர்களில் சிலரை ஐந்து ஆண்டுகள் வரை கட்டாய விடுப்பில் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அரசு நிர்வகித்து வரும் ஏர் இந்தியா நிறுவனம் மிகப்பெரிய அளவிற்கு இழப்பைச் சந்தித்த நிலையில், அதனைத் தனியார் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் மத்திய அரசு அந்த முடிவை நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில், கொரோனா கிருமித் தொற்றால் மார்ச் 23ஆம் தேதியில் இருந்து விமானப் போக்குவரத்திற்கு இந்தியா தடைவிதித்துள்ளது. உள்ளூர் விமானச் சேவை மே 25ஆம் தேதியில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. என்றாலும் சுமார் 50% விமானங்களே இயக்கப்படுகின்றன.

உலக அளவில் பல்வேறு விமான நிறுவனங்கள் ஆயிரக்கணக்காக பணியாளர்களை அதிரடியாக நீக்கியுள்ள நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் குறிப்பிடத்தக்க அளவிலான ஊழியர்களை சம்பளம் இல்லாத கட்டாய விடுப்பில் அனுப்ப ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கட்டாய விடுப்பு ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களின் செயல்திறன், வேலைத் தரம், உடல் நலம், உடல்நலக்குறைவால் உடனடியாக வேலைக்கு வர இயலாதவர்கள் போன்றவற்றின் அடிப்படையில் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவதற்காக ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஜூலை 20ஆம் தேதியிலிருந்து ஏர் இந்தியா அலுவலகங்கள் அனைத்து பயணியாளர்களுடன் இயங்கும் என்றும் மருத்துவச் சூழ்நிலை, கர்ப்பிணி பணியாளர்கள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருப்பவர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்