புது தடுப்பூசி: மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை

புது தடுப்பூசி: மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை

2 mins read
65d420fc-4cc6-4040-a76e-5fd423b1e641
தாய்லாந்தில் உள்ள தேசிய குரங்குகள் ஆய்வு நிலையத்தில் புதிய தடுப்பு மருந்து பரிசோதனைக்காக, முதல் கட்டமாக 13 குரங்குகளுக்கு செலுத்தப்பட்டதை மருத்துவர் சுசிந்தா மலைவிடிஜ்னோன்ட் மேற்பார்வையிட்டார். படம்: ஏஎஃப்பி -

புதுடெல்லி: கொரோனா கிருமித்தொற்றுக்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த தடுப்பூசியையும் மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்கும் நடவடிக்கை தொடங்கி உள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த 'பாரத் பயோடெக்' நிறுவனம் 'கோவேக்சின்' என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இம்மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதிப்பதற்கான பணியை இந்நிறுவனம் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக அண்மையில் தகவல் வெளியானது.

இந்நிலையில், அகமதாபாத்தை சேர்ந்த 'ஜைடஸ் கேடிலா' என்ற நிறுவனும் கொரோனா கிருமித்தொற்றுக்கான தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதையடுத்து இந்நிறுவனமும் 'ஜைகோவ்-டி' என்ற அந்தத் தடுப்பூசியை மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்க உள்ளது.

'கோவேக்சின்' தடுப்பூசியானது கொரோனா கிருமித் திரிபுவில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது என்றும், 'ஜைகோவ்-டி' தடுப்பூசி மரபணு அடிப்படையிலானது என்றும் இந்திய ஊடகத் தகவல் தெரிவிக்கின்றது. மேற்குறிப்பிட்ட இரு நிறுவனங்களும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளை எலிகள், பன்றிகள் என விலங்குகளுக்குச் செலுத்தி பரிசோதித்ததில் வெற்றி கண்டுள்ளன.

அதாவது, இரண்டு மருந்துகளும் கொரோனா கிருமிக்கு எதிரான தடுப்பு சக்தியை கொண்டிருப்பது நிரூபணமாகி உள்ளது. மேலும் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்தே இரு மருந்துகளும் அடுத்தக்கட்டமாக மனிதர்களுக்குச் செலுத்தப்பட உள்ளன. இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.

'ஜைடஸ் கேடிலா' நிறுவனம், தனது தடுப்பூசியை ஆயிரம் பேருக்கு செலுத்தி பார்க்கும் சோதனையை தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த பரிசோதனையின்போது, தடுப்பூசியின் பாதுகாப்புத்தன்மை, சகிப்புத்தன்மை, நோய் எதிர்ப்புத்திறன் ஆகியவை சோதிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

முதல் கட்ட பாதுகாப்பு சோதனை 84 நாட்களில் முடியும்; இரண்டாவது கட்ட சோதனையின்போது, பாதுகாப்பு, செயல்திறன் சோதிக்கப்படும். இது அடுத்த 84 நாட்களில் நிறைவு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பரிசோதனைகள் வெற்றியடைந்தால் இவ்வாண்டின் இறுதியில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.