இந்தியா: ஒரு மில்லியனை நெருங்கும் கிருமித்தொற்று

இந்தியா: ஒரு மில்லியனை நெருங்கும் கிருமித்தொற்று

2 mins read
62f0c664-b60f-4087-9736-c40926665ad2
ஜம்மு பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் கொவிட்-19 சோதனைக்கான சளி மாதிரி எடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். படம்: இபிஏ -

இந்தியாவில் இதற்குமுன் இல்லாத அளவாக, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32,695 பேருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 9,68,876ஆக உயர்ந்துள்ளதால் இன்று அந்த எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே நாளில் 30,000 பேருக்கு மேல் கொரோனா தொற்றியிருப்பது இதுவே முதன்முறை.

அதுபோல், கிருமித்தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 606 கூடி, மொத்த உயிரிழப்பு 24,915ஐ எட்டியது.

ஆக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது மகாராஷ்டிர மாநிலம்தான். அங்கு இதுவரை 275,640 பேருக்கு கொரோனா தொற்று கண்ட நிலையில், அதன் காரணமாக 11,000க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர்.

இப்படி நாளுக்கு நாள் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பீகார் மாநிலத்தில் இம்மாத இறுதி வரைக்கும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் கர்நாடக மாநிலம் அதிகம் கவனிக்கப்படும் மாநிலமாகி இருக்கிறது. அதே வேளையில், உத்தரப் பிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் இந்த மாதத்தில் கிருமித்தொற்றின் தாக்கம் கூடியிருக்கிறது.

கர்நாடகாவில் புதிதாக கிருமி தொற்றுவோர் விகிதம் நாளுக்கு 7.29 விழுக்காடாக உள்ளது.

ஆந்திர மாநிலம் 6.87 விழுக்காட்டுடன் அதற்கடுத்த நிலையில் உள்ளது. உத்தரப் பிரதேசத்திலும் மேற்கு வங்கத்திலும் அந்த விகிதம் முறையே 4.14%, 4.78% என இருக்கிறது.

இதனிடையே, முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 20,572 பேர் கிருமித்தொற்றில் இருந்து விடுபட்டுவிட்டதாக இந்திய சுகாதார, குடும்ப நல்வாழ்வு அமைச்சு நேற்றுக் காலை 8 மணிக்கு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

இதையடுத்து, கொரோனா தொற்றில் இருந்து தேறியோர் விகிதம் 63.14 விழுக்காடாக உயர்ந்தது. இறப்பு விகிதம் 3.91 விழுக்காடாக உள்ளது.

ஒட்டுமொத்தத்தில், இதுவரை 612,815 பேர் கிருமித்தொற்றில் இருந்து மீண்டுவிட்டனர்.

நேற்று முன்தினம் புதன்கிழமை மட்டும் 326,826 சளி/எச்சில் மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டதாக அமைச்சு கூறியது. இதனுடன் சேர்த்து, இந்தியாவில் இதுவரை 12,739,490 கிருமித்தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கிடையே, இப்போதைய நிலவரத்தின் அடிப்படையில் பார்க்கும்போது இவ்வாண்டு செப்டம்பர் 1ஆம் தேதிவாக்கில் இந்தியாவில் 3.5 மில்லியன் பேரை கொரோனா தொற்றியிருக்கும் என்று பெங்களூரில் அமைந்துள்ள இந்திய அறிவியல் கழகம் கணித்து இருக்கிறது.