மருத்துவமனை சேர்த்துக்கொள்ளாததால் முதல்வரின் வீட்டுக்கே சென்ற கொரோனா நோயாளிகள்

மருத்துவமனை சேர்த்துக்கொள்ளாததால் முதல்வரின் வீட்டுக்கே சென்ற கொரோனா நோயாளிகள்

2 mins read
b799b4a8-35ee-4874-aafb-d02118c7e125
பெங்களூருவில் ஊரடங்கு நடப்பில் உள்ளது. படம்: இபிஏ -

கர்நாடகாவில் கொவிட்-19 சம்பவங்கள் அதிகரித்து வரும் வேளையில், படுக்கை வசதி இல்லை என்று கூறி நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவரும் போக்கையும் காண முடிகிறது.

அவ்வாறு ஒருவர் பல மருத்துவமனைகளுக்கு அலைக்கழிக்கப்பட்டது, அந்த நபர் ஒரு மருத்துவமனையின் வாசலிலேயே உயிரிழந்தது போன்ற சம்பவங்களும் அங்கு நிகழ்ந்தது நினைவிருக்கலாம்.

இதையெல்லாம் பார்த்து, பெங்களூருவில் கொரோனா நோயாளி ஒருவர் எடுத்த நடவடிக்கை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பெங்களூரு பனசங்கரி அருகே அம்பேத்கர் நகரில் வசிக்கும் ஒருவருக்கும், அவரது மனைவி, 2 குழந்தைகளுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

அந்தக் குடும்பத்தினர் ஒரு மருத்துவமனைக்குச் சென்றபோது, அங்கு படுக்கை வசதி இல்லை என்று கூறி வேறு மருத்துவமனைக்குச் செல்லும்படி கூறிவிட்டனர்.

வேறு மருத்துவமனைக்குச் செல்ல ஆம்புலன்ஸ் அனுப்புமாறு மாநகராட்சிக்குத் தெரியப்படுத்தினார் அவர். ஆனால் ஆம்புலன்ஸ் வரவில்லை. செய்வதறியாது தவித்து வந்தது மொத்தக் குடும்பமும்.

இந்த நிலையில், நேற்று பிற்பகல்வாக்கில் அந்த நபர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து கொண்டு கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் காவேரி இல்லத்திற்குச் சென்றார்.

அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலரிடம், தங்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்க மறுப்பதாகவும் கூறினார்.

இதை கேட்டு அங்கிருந்த காவலர்கள் அனைவரும் தெறித்து ஓடினார்கள். அவருக்கு அருகில் காவலர் யாரும் செல்லவில்லை.

முதல்வரின் வீட்டுக்கு அருகே தம் குடும்பத்தாருடன் அவர் நின்று கொண்டிருந்தார்.

போலிசின் அழைப்பை ஏற்று அவ்விடத்துக்கு 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சுமார் 35 நிமிடங்களில் வந்து சேர்ந்தன.

அந்தக் குடும்பத்தினர் தற்போது மல்லேசுவரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்