இந்தியா, ஃபிரான்ஸ் இடையே நாளை (ஜூலை 18) முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை 28 விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அமெரிக்கா- இந்தியா இடையே இம்மாத இறுதிவரை 18 விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
இதற்காக இரு நாடுகளுடனும் புதிய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் பூரி, விமானங்களை இயக்குவது தொடர்பாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
அனைத்துலக அளவில் 'ஏர் பபள்' (Air Bubble) எனும் நடைமுறையைப் பின்பற்றி இவ்வாறு சில நாடுகளுக்கு இடையே நிறுத்தப்பட்ட விமானச் சேவையை மீண்டும் தொடங்குவது வழக்கமாக உள்ளது.
சம்பந்தப்பட்ட இரு நாடுகளும் முன்வைக்கும் நிபந்தனைகள், ஆலோசனைகளை இருதரப்பும் பரிசீலித்து அதன் அடிப்படையில் செய்துகொள்ளும் ஒப்பந்தத்தின்படி விமானங்கள் இயக்கப்படுகின்றன.
கடந்த மார்ச் 23ஆம் தேதி அனைத்துலக விமானங்கள் இந்தியாவில் தரையிறங்க தடை விதிக்கப்பட்டது. சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு இந்தியா, அமெரிக்கா இடையே விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்குகிறது.
நாளை முதல் டெல்லி, மும்பையில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ உள்ளிட்ட நகரங்களுக்கு 18 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
அதேபோல் டெல்லி, மும்பை, பெங்களூருவில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை 28 விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
"ஜெர்மனியுடனான பேச்சுவார்த்தை முடியும் தருவாயில் உள்ளது. லுஃப்தான்ஸா நிறுவனம் விமானங்களை இயக்கும். அனைத்துலக விமானச் சேவையைத் தொடங்குவதற்கு மத்திய விமானப் போக்குவரத்து ஆணையம் அனுமதி அளிக்கும் வரை இத்தகைய ஏற்பாட்டின் மூலம் மட்டுமே விமானங்களை இயக்க முடியும்," என்றார் அமைச்சர் ஹர்தீப் பூரி.

