இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 1 மில்லியனைக் கடந்தது; பலி எண்ணிக்கை 25,600க்கு மேல்

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 1 மில்லியனைக் கடந்தது; பலி எண்ணிக்கை 25,600க்கு மேல்

2 mins read
048cc1f7-6287-4027-9380-f4fc91011dfd
மும்பையில் வீடு வீடாகச் சென்று சுகாதாரப் பணியாளர்கள் கிருமித்தொற்று பரிசோதனை செய்து வருகின்றனர். படம்: இபிஏ -

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் இந்தியா இன்று (ஜூலை 17) புதிய உச்சத்தைத் தொட்டது. சுமார் 1.3 பில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட அந்நாட்டில் இன்று காலை வரையிலான நிலவரப்படி ஒரு மில்லியன் பேர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

மத்திய சுகாதார அமைச்சின் அறிவிப்புப்படி 1,003,832 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது. இவர்களில் 635,757 பேர் குணமடைந்து விட்ட னர். சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 342,473.

தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25,602க்கு உயர்ந்தது. கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் தொடர்ந்து உள்ளது இந்தியா.

மேலும் ஓர் உச்சத்தையும் இந்தியா அடைந்தது. வியாழக்கிழமை காலை தொடங்கி இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக கிருமி தொற்றியோர் எண்ணிக்கை 34,956 என பதிவானது.

ஒரே நாளில் இந்த அளவுக்கு அதிகமானோருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது நேற்று தான் முதல்முறை. 24 மணி நேரத்தில் மாண்டோர் எண்ணிக்கை 687 என்றும் சுகாதார அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

இந்தியாவில் ஜனவரி 31ஆம் தேதி முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார். அந்த எண்ணிக்கை நூறாயிரத்தைத் தொட 109 நாட்கள் ஆனது. ஆனால், தற்போது மூன்றே நாட்களில் நூறாயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு 1 மில்லியனாகிவிட்டது.

அடுத்த ஒருசில வாரங்களில், ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் இந்த எண்ணிக்கை இரு மில்லியனைத் தொட்டுவிடும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்