திருமலை: திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "திருமலையில் ஏழுமலையான் கோவில் உள்பட பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் ஆந்திர மாநில காவல் துறையைச் சேர்ந்த 60 பேருக்கும் திருமலை-திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும்படைப் பிரிவில் பணியாற்றி வரும் ஊழியர்களில் 16 பேருக்கும் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் லட்டு தயாரிப்பு, விநியோகத்துறையில் பணியாற்றி வரும் 14 ஊழியர்கள், ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் என 70 பேருக்கும் ஆக மொத்தம் 160 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.
ஏழுமலையான் கோவிலில் பணியாற்றும் 40 அர்ச்சகர்களில் அதில் 14 பேரும் தொற்றால் அவதிப்படுகின்றனர். அவர்கள் அனை வருக்கும் அர்ச்சகர் பவனில் தனித் தனி படுக்கையில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது," என அவர் கூறினார்.
இதற்கிடையே, அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களின் உடல்நலம் கருதி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களுக்குத் தற்காலிகத் தடை விதிக்க வேண்டும் என தலைமை அர்ச்சகர் ரமண தீக்ஷிதர் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கிருமித்தொற்று காரணமாக வரலாற்றில் முதன்முறையாக ஏழுமலையான் கோவில் மார்ச் 16ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரை மூடப்பட்டு இருந்தது.

