மும்பை: மும்பையில் நிகழ்ந்த இருவேறு கட்டட விபத்துகளில் 9 பேர் பலியாகினர். முப்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வியாழக்கிழமை இரவு சுமார் 8.30 மணியளவில் மும்பை கோட்டைப் பகுதியில் முதல் விபத்து நிகழ்ந்தது. அங்குள்ள பழைய கட்டடம் ஒன்று கனமழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்தது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட ஒன்பது பேர் பலியாகினர். கொரோனா விவகாரம் காரணமாக அக்கட்டடத்தைப் பழுதுபார்க்கும் பணி தாமதமாகி வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வடமாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மகாராஷ்டிராவிலும் பல மாவட்டங்களில் கனமழை நீடித்து வருவதால் மழை சார்ந்த விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மும்பையில் உள்ள கோட்டைப் பகுதியில் இருந்த பழைய கட்டடம் இடிந்து விழுந்தது குறித்து தகவல் அறிந்த மீட்பு மற்றும் தீயணைப்புப் படையினர் அங்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான நடவடிக்கைளில் ஈடுபட்டனர். இதன் பலனாக 30 பேர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். கட்டட இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மீட்புப் படையினர் நேற்று மாலை வரை தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அக்குறிப்பிட்ட கட்டடத்தின் பல இடங்களில் பழுதுபார்க்க வேண்டிய அவசியம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு கட்டிட உரிமை யாளரும் அங்கு குடியிருப்பவர்களும் கலந்தாலோசித்து அதன் முடிவில் பழுதுபார்க்கும் பணிகளைத் துவங்கத் திட்டமிட்டிருந்தனர். எனினும் கொரோனா கிருமித் தொற்றுப் பரவல் காரணமாக அந்தப் பணி பாதிக்கப்பட்டதாக போலிசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேபோல் மும்பையின் மற்றொரு பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இருவர் பலியாகி உள்ளனர். மும்பையில் கடந்த ஆண்டும் ஜூலை 16ஆம் தேதி டோங்கிரி பகுதியில் உள்ள 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் சிலர் பலியாகினர். அந்தக் கட்டடமும் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதும் சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்றும் பின்னர் தெரியவந்தது.
இரவில் இடிந்து விழுந்த கட்டடம்: 9 பேர் பரிதாப பலி
2 mins read
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள் இடிபாடு களுக்கு நடுவில் யாரேனும் உள்ளனரா எனத் தேடினர். படம்: ராய்ட்டர்ஸ் -

