ரோத்தக்: ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம், தேசிய நச்சு உயிரியியல் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து கோவாக்ஸின் என்னும் கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்து உள்ளது.
கொரோனா கிருமித்தொற்றிலிருந்து குணப்படுத்த உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்தான இதனை மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்கும் முயற்சி இரு கட்டங்களாகத் தொடங்கப்பட்டுள்ளது.
இருவிதப் பரிசோதனைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் (ஐசிஎம்ஆர்) மத்திய சுகாதார அமைச்சும் அனுமதி வழங்கியுள்ளன.அம்மருந்து தற்போது மனிதர்களுக்குச் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது. ஹரியானாவின் ரோத்தக் நகரில் மூன்று தொண்டூழியர்களின் உடலில் மருந்து செலுத்தப்பட்டது. நீண்ட நேரம் வரை அவர்களின் உடல்நலனில் எதிர்மறை மாற்றம் எதுவும் இன்றி நலமாக இருந்ததாக ரோத்தக் பிஜிஐஎம்எஸ் மருத்துவமனையின் மருத்துவர் குழு செய்தியாளர்களிடம் தெரிவித்தது.
ஹரியானா மாநில சுகாதார அமைச்சர் அனில் விஜ் இதுகுறித்து டுவிட்டர் தகவல் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். மூன்று வகையான நோயாளிகளின் உடலுக்குள் செலுத்தப்பட்ட மருந்து எந்தவிதப் பிரச்சினையையும் ஏற்படுத்தவில்லை என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். கோவாக்ஸின் சோதனையில் வெற்றி பெறும் என்று அனைத்து தரப்பினரும் நம்பிக்கையுடன் உள்ளனர்.
தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு இந்தப் பரிசோதனை நடத்தப்படும். முதல் மூன்று மாதங்கள் கோவாக்ஸின் தடுப்பு மருந்தின் தன்மை குறித்தும் உடலில் எவ்வாறு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் திறன் குறித்தும் ஆய்வு செய்யப்படும். ஏதாவது எதிர்மறையான விளைவுகள் உண்டாக்குகிறதா என பரிசோதிக்கப்படும். இந்தப் பரிசோதனைக்கு 30 வயது முதல் 40 வயதுள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
இந்நிலையில், இந்துஸ்தான் டைம்ஸ் இணையச் செய்தி புதிய தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளது. கோவாக்ஸின் தடுப்பு மருந்து மனிதர்களிடம் செலுத்தி சோதிக்கும் நடவடிக்கை ஜூலை 15ஆம் தேதி தொடங்கியதாகவும் 375 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் உடலில் மருந்து செலுத்தப்பட்டு சோதிக்கப்படுவதாகவும் அச்செய்தி குறிப்பிட்டது. நாடு முழுவதும் வெவ்வேறு பகுதிகளில் உள்ள 12 மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் மனிதர்களுக்கு மருந்து செலுத்தி சோதிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அந்த இணையச் செய்தி, அந்த 375 பேர் யார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியது. பரிசோதனை காலம் முடிந்த பின்னர்தான் யார் யார் பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர் என்று தெரிய வரும் எனக் கூறப்படுகிறது.
மனிதர்களுக்கு மருந்து செலுத்தி பரிசோதிக்கத் தேர்ந்ெதடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் சென்னையிலுள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனையும் அடங்கும்.
முதற்கட்ட பரிசோதனையில் மருந்தால் பாதிப்பு ஏற்படுகிறதா என்பது மட்டுமே கண்டறியப்படும். இரண்டாவது கட்ட பரிசோதனையில் மருந்தின் அளவு அதிகரிக்கப்பட்டு, கொரோனா கிருமியை எதிர்த்துப் போராடுகிறதா என்பது சோதிக்கப்படும் என மருத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

