லடாக்: லடாக் யூனியன் பிரதேசத்தின் கிழக்கே சீன ராணுவம் ஊடுருவியதன் காரணமாக கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் இரு நாட்டு ராணுவமும் மோதலில் ஈடுபட்டன. இதில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்க இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதால் இம்மாதம் 6ஆம் தேதி முதற்கட்ட படை விலக்கல் தொடங்கியது. படைகளை முற்றிலும் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில் காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் அதிகாரபூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், லடாக்கில் பங்கோங்சோ ஏரிக்கரையில் அமைந்துள்ள லுகுங் பகுதியில் ராணுவம் மற்றும் இந்தோ-திபெத் பாதுகாப்புப் படையினர் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுைகயில், "கிழக்கு லடாக்கில் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்தப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முடிந்தால், அதைவிட சிறந்தது வேறெதுவும் இல்லை. ஆனால் இதில் எந்த அளவுக்கு பிரச்சினை தீர்க்கப்படும் என்பதற்கு என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது.
"எது நிகழ்ந்தாலும் இந்தியாவின் ஓர் அங்குலம் நிலத்தைக்கூட உலகின் எந்த ஒரு சக்தியாலும் தொடமுடியாது என்பதை உங்களுக்கு உறுதியளிக்க முடியும். இந்தியா பலவீனமான நாடு அல்ல. இங்கு வீரர்கள் புரிந்த ஒப்பற்ற தியாகம் வீணாவதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.
"எந்தவொரு நாட்டிலும் இந்தியா ஊடுருவவோ நிலத்தை ஆக்கிரமிக்கவோ இல்லை. ஆனால் இந்தியாவின் சுயமரியாதையை யாரும் காயப்படுத்த விரும்பினால் அதை பொறுத்துக்கொள்ளமாட்டோம். எந்த நிலையிலும் அதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும்," என்று தெரிவித்தார் ராஜ்நாத்.

