ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் ஊரடங்கு நடப்பில் இருந்தபோது சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட 14,000 மது போத்தல்கள் ரோடு ரோலர் கனரக வாகனத்தால் ஏற்றி அழிக்கப்பட்டன. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட வேளையில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. அதனால் பல இடங்களில் போலி மதுபான புழக்கம் அதிகரித்து மது போத்தல்கள் கள்ளத்தனமாகக் கடத்தப்பட்டு வந்தன.
இது சம்பந்தமாக நடவடிக்கையில் இறங்கிய போலிசார் மாநிலம் முழுவதும் 14,000க்கும் மேற்பட்ட மது போத்தல்களைக் கைப்பற்றினர். இவற்றின் மதிப்பு 72 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும். இந்நிலையில் அவற்றை எல்லாம் ரோடு ரோலர் கனரக வாகனம் மூலம் கிருஷ்ணா மாவட்ட போலிசார் அழித்தனர்.
மசிலிப்பட்டணம் நகரில் வெள்ளிக்கிழமை சாலையில் கொட்டி மது போத்தல்கள் அழிக்கப்படுவதைப் பார்க்க மக்கள் கூட்டம் திரண்டது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

