வாரணாசி: நேப்பாள ஆடவர் ஒருவரை மொட்டையடித்து 'ஜெய் ஸ்ரீராம்' என வலுக்கட்டாயமாக உரக்க முழக்கச் செய்த கும்பல் போலிசிடம் பிடிபட்டுள்ளது.
நேப்பாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி, சில தினங்களுக்கு முன்னர் கடவுள் ராமர் அயோத்தியில் பிறக்கவில்லை எனவும் நேப்பாளத்தில்தான் பிறந்தார் எனவும் பேசி சர்ச்சையைக் கிளப் பினார். ஏதாவது சொல்லி இந்தியாவை தேவையின்றி பகைத்துக்கொள்ள வேண்டாம் என முன்னாள் நேப்பாள பிரதமர் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பிரதமர் சர்மா தனது கருத்தை திரும்பப் பெற்றார்.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நேப்பாள நாட்டைச் சேர்ந்த ஆடவர் ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் மொட்டை அடித்து, 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கமிடுமாறு கட்டாயப்படுத்தியது.
இதை அந்தக் கும்பல் காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பியது. இச்சம்பவம் குறித்து வாரணாசி போலிஸ் அதிகாரி அமித் பதாக் கூறுகையில், "சம்பவத்தில் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்," என கூறினார்.
இந்நிலையில் வாலிபர் மொட்டையடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தைத் தொடர்பு கொண்டு ேநப்பாளத் தூதர் நீலாம்பர் ஆச்சார்யா பேசினார்.
சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போது முதல்வர் ஆவேசத்துடன் உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.

