புதுடெல்லி: இந்தியாவில் கொவிட்-19 சமூகப் பரவலாகியுள்ளது. அதனால்தான் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது என இந்திய மருத்துவக் கூட்டமைப்பு அமைப்பு (ஐஎம்ஏ) தெரிவித்துள்ளது. நகரங்களை ஆக்கிரமித்த தொற்று இப்போது சிறு நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் பரவத் தொடங்கியுள்ளது. இப்படியே சென்றால் தொற்றைக் கட்டுப்படுத்துவது கடினமானதாக மாறிவிடும்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள இந்திய மருத்துவச் சங்கத்தின் தலைவர் வி.கே. மோங்கோ, கொரோனாவால் தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 30,000 தாண்டி பதிவாகி வருவதாகவும், இது மிகவும் மோசமான நிலை என்றும் வேதனை தெரிவித்தார். ஒட்டுமொத்த பாதிப்பு 10 லட்சத்து 77 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. தொற்றுப்பரவலால் நாடு மிகவும் மோசமான சூழ்நிலையை எதிர்நோக்குவதாக திரு மோங்கோ எச்சரித்துள்ளார்.
டெல்லியில் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, கோவா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் உள்மாவட்டங்கள், கிராமங்களில் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்போது பல நகரங்கள் புதிதாக ஹாட்ஸ்பாட் பகுதிகளாக மாறி வருகின்றன. மாநில அரசுகள் முழு விழிப்புடன் இருந்து தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும். இதைக் கட்டுப்படுத்த இரு வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. முதலாவது, 70% மக்களை நோய்த்தொற்றுக்கு ஆளாக்கி, இயற்கையாகவே உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியை கொண்டுவருவது, இரண்டாவது தடுப்பூசி போடுவதாகும் என்று மோங்கா தெரிவித்தார்.

