ஹைதராபாத்: நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா சிகிச்சைக்கு பிளாஸ்மா தானம் நல்ல பலனளிப்பதாக பலர் கூறி வருகின்றனர்.
மத்திய, மாநில அரசுகளும் கொரோனாவிலிருந்து மீண்டவர்களை பிளாஸ்மா தானம் செய்ய வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் இதை வைத்து சிலர் மோசடி சம்பவங்களிலும் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த சந்தீப் ரெட்டி, 25, என்பவர் கொரோனா கிருமித்தொற்றில் இருந்து தாம் மீண்டுள்ளதாகவும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா தானம் செய்ய விரும்புவதாகவும் சமூக வலைத் தளங்களில் பதிவிட்டுள்ளார்.
அதை நம்பி கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவரது குடும்பங்கள் இளைஞரை அணுக போக்குவரத்துச் செலவுக்குப் பணம் வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.
அவ்வாறு கூறியே தம்மை தொடர்புகொண்ட அத்தனை பேரிடமும் சில ஆயிரங்களை இணையம் வழியாகப் பெற்றுள்ளார் அவர். பின்னர் தமது கைபேசியை அடைத்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.
பணம் அனுப்பிய பலரும் சந்தீப்பை தொடர்புகொள்ள இயலாமல் தவித்த னர். பாதிக்கப்பட்ட ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலிசார் நடவடிக்கையில் இறங்கினர். தீவிரமாக தேடப்பட்ட பின்னர் சந்தீப் ரெட்டியை அவர்கள் கைது செய்தனர்.
கிட்டத்தட்ட 200 பேரிடம் அவர் இவ்வாறு பணம் பெற்றது விசாரணையில் தெரிய வந்தது.
இதுபோன்று யாராவது பிளாஸ்மா தானம் செய்வதாக பணம் கேட்டால் உடனடியாக பணம் அனுப்பிவிட வேண்டாம் என்றும் விளம்பரம் செய்பவர்கள் பற்றி புகார் செய்யுமாறும் தெலுங்கானா போலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

