கொவிட்-19 மருத்துவருக்கே இந்த நிலைமையா? மருத்துவமனைகளில் அனுமதி மறுப்பு; 28 நாள் போராட்டத்துக்குப் பிறகு உயிரிழந்தார்

2 mins read
832b4723-8647-42d3-b73d-5850a44252c1
மருத்துவர் மஞ்சுநாத்தின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, அவர் பெங்களூரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வுக் கழகத்தில் ஜூலை 9 அன்று சேர்க்கப்பட்டார். படம்: ஊடகம் -

பெங்களூருவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்துவந்த மருத்துவருக்கு கொரோனா தொற்றியபோது, அவரை 3 தனியார் மருத்துவமனைகள் சேர்த்துக்கொள்ள மறுப்பு தெரிவித்ததன.

அவரது உறவினர்கள் நால்வர் மற்றொரு மருத்துவமனை வாயிலில், சாலையில் அமர்ந்து போராடிய பிறகே அந்த மருத்துவமனை அவரைச் சேர்த்துக்கொண்டது.

கர்நாடகாவின் கனகபுரா தாலுகாவில் அமைந்துள்ள சிக்கமுடாவடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார் மருத்துவர் மஞ்சுநாத். அப்போது அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டன.

கொரோனா தொற்று அவருக்கு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், அவரது உறவினரும் மருத்துவருமான டாக்டர் நாகேந்திர குமார் அவரை மருத்துவமனையில் சேர்க்க முயற்சி செய்தார்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதற்கான சான்றிதழ் அவரிடம் இல்லாததால் அவரை ஏற்க, அவர்கள் அணுகிய முதல் மருத்துவமனை மறுத்தது.

அதையே காரணம் காட்டி மற்ற இரு மருத்துவமனைகளும் அனுமதிக்க மறுத்தன.

ஜூன் 25ஆம் தேதி அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவரது நிலைமை ஓரளவுக்குத் தேறியது.

ஆனால் ஜூலை 9ஆம் தேதி அவரது உடல்நலம் மீண்டும் மோசமானது.

அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது. அவர் பெங்களூரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வுக் கழகத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

டாக்டர் மஞ்சுநாத்தின் நுரையீரல் விரிவடையாததால், இயன் மருத்துவரின் உதவி தேவைப்பட்டது.

ஆனால், இயன் மருத்துவர்கள் யாரும் கொரோனா நோயாளியை அணுக மறுத்துவிட்டதால், அவரது நிலைமை தொடர்ந்து மோசமானது.

மருத்துவர் மஞ்சுநாத்தின் மனைவி, 14 வயது மகன், மாமனார் உட்பட மொத்தம் 6 பேருக்கு தொற்று ஏற்பட்டது. அவரது மனைவியும் மகனும் உடல்நலம் தேறிவிட்டனர்.

அவரது மாமனார் சில நாட்களுக்கு முன்பு கொரோனாவுக்கு பலியானார்.

குறிப்புச் சொற்கள்