புதுடெல்லி: கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை சக நோயாளி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியைச் சேர்ந்த அந்தச் சிறுமி அங்குள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உலகிலேயே மிகப்பெரிய கொரோனா கிருமி தடுப்பு மையம் என்று பெயரெடுத்துள்ள அந்த மையத்தில் சுமார் 10 ஆயிரம் படுக்கைகள் உள்ளன.
இங்கு கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ள 19 வயது இளைஞரும் அவரது நண்பரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி அச்சிறுமியை அம்மையத்தின் கழிவறையில் வைத்து அந்த இளையர் பாலியல் பலாத்காரம் செய்தார் என்றும் அதை அவரது நண்பர் காணொளியாகப் படம் பிடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமியின் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் இளையர்கள் இருவரும் கைதாகினர். எனினும் கிருமித் தொற்றிலிருந்து குணமடையும் வரை அவர்கள் நீதிமன்றக் காவலின் கீழ் இதே மையத்தில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஆகப்பெரிய தனிமைப்படுத்தும் மையத்தில் 14 வயது சிறுமி சீரழிக்கப்பட்டது புது விவாதங்களை எழுப்பி உள்ளது.
இதேபோல் மும்பையிலும் கொரோனா தடுப்பு மையத்தில் தங்கியிருந்த 40 வயது பெண் மீது 25 வயது இளையர் ஒருவர் பாலியல் தாக்குதல் நடத்தியதாக அண்மையில் ஒரு வழக்கு பதிவானது. மேலும் பீகாரில் கொரோனா மையத்தில் ஒரு சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த ஒருவர் கைதாகியுள்ளார்.

