புதுடெல்லி: முப்பதே விநாடிகளில் கொரோனா கிருமித் தொற்றைக் கண்டறிவதற்கான புதுக் கருவியை இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து உருவாக்க உள்ளன.
உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது கொரோனா கிருமித் தொற்று. இத்தொற்றைக் கண்டுபிடிக்க பல பரிசோதனை முறைகள் பின்பற்றப்படுகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை 'ஆர்.டி.பி.சிஆர்.' முறை பின்பற்றப்படுகிறது. எனினும் பரிசோதனை முடிவுகளை அறிய சில மணி நேரம் காத்திருக்க வேண்டும்.
இந்நிலையில் முப்பதே விநாடிகளில் கிருமித்தொற்று உள்ளதா என்பதை உறுதி செய்வதற்கான கருவியை இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து உருவாக்க உள்ளன. இதுதொடர்பாக இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இஸ்ரேல் விஞ்ஞானிகள் குழுவுடன் இணைந்து செயல்பட உள்ளது.
"இஸ்ரேல் தொழில்நுட்பத்தை இந்தியாவின் வளர்ச்சி மற்றும் உற்பத்தித் திறனுடன் இணைத்து இயல்பு வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்," என அந்நாடு தெரிவித்துள்ளது.
கொரோனா விவகாரம் தலைதூக்கியது முதல் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகுவும் பிரதமர் மோடியும் தொலைபேசி வழி மூன்று முறை ஆலோசனை நடத்தி உள்ளனர்.
இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உள்ளன.
அண்மைய சில ஆண்டுகளாகவே இந்தியாவும் இஸ்ரேலும் அதிக நெருக்கம் பாராட்டி வருகின்றன. இஸ்ரேலுடன் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

