சென்னை: கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதிக்கும் ஆய்வு இந்தியாவில் தீவிரமடைந்துள்ளது. இது தொடர்பாக முன்னணி நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்தியாவில் தற்போது பல்வேறு முக்கிய நகரங்களில் இத்தகைய பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா கிருமிக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதில் உலகளவில் பெரும் போட்டி நிலவுகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் பாரத் பயோடெக் மற்றும் ஸைடஸ் ஆகிய இரு நிறுவனங்கள் தடுப்பூசி ஆய்வில் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன.
இந்நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ள தடுப்பூசியை மனிதர்களுக்குச் செலுத்தும் பரிசோதனை முக்கிய நகரங்களில் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் ஆகியவை இணைந்து கண்டுபிடித்துள்ள 'கோவேக்சின்' என்ற தடுப்பூசி 12 நகரங்களில் பரிசோதிக்கப்படுகிறது. இதுவரை ஐநூறு தன்னார்வலர்கள் இப்பரிசோதனையில் பங்கேற்றுள்ளனர்.
முதற்கட்ட ஆய்வில் மருந்து செலுத்தப்பட்டவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
"தோல் நிறம் சிவத்தல், வலி மற்றும் லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகள் அனைத்து வகை தடுப்பூசிகளை செலுத்தும்போதும் ஏற்படும் என்பதால் கவலைப்பட வேண்டியதில்லை. பரிசோதனையில் பங்கேற்றுள்ள தன்னார்வலர்கள் அனைவரும் நலமாக உள்ளனர்," என மனித சோதனைகளுக்குத் தலைமை தாங்கும் எய்ம்ஸ்-பாட்னா இயக்குநர் பிகே. சிங் தெரிவித்துள்ளார்.
'கோவேக்சின்' போலவே 'ஸைகோவ்-டி' என்ற மருந்தும் தற்போது மனிதர்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 15ஆம் தேதி முதல் இந்த ஆய்வு நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆதரவுடன் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது தடுப்பு மருந்தும் இந்தியாவில் விரைவில் பரிசோதிக்கப்பட உள்ளது. இம்மருந்தை உற்பத்தி செய்யும் பங்குதாரராக புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் இணைந்துள்ளது.
'கோவேக்சின்' தடுப்பூசி 12 இடங்களிலும், 'ஸைகோவ்-டி பல்வேறு நகரங்களிலும் பரிசோதிக்கப்பட உள்ளன. இந்தப் பரிசோதனைகளின் முடிவு தெரியவர சில மாதங்களாகும் என்றும் அதன்பிறகே இவை சந்தைக்கு வரும் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ஆகக்குறைந்த விலையில் கிடைக்கும் என்றும் இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு இப்போதே தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

