திருவனந்தபுரம்: கேரளத் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள அரசு அதிகாரி சுவப்னா சுரேஷ், கடத்தல் எவ்வாறு அரங்கேற்றப்பட்டது என்பது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.
விமானங்களில் காய்கறிகள் கொண்டு செல்லும் கொள்கலன்கள் மூலமாக ரொக்கப் பணமும் தங்கமும் கடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு சிற்றரசின் தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி கேரளாவுக்குள் தங்கம் கடத்தி வரப்பட்டது அண்மையில் அம்பலமானது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் 30 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தக் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட கேரள அரசு ஊழியர் சுவப்னா சுரேஷ் கைதானார். இதையடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு இருபதுக்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் சுவப்னாவை புலனாய்வு அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்தனர். அவர் அளித்த தகவல்களின்படி அவரது பெயரில் உள்ள வங்கிக் கணக்குகளையும் பாதுகாப்பு பெட்டகங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
குறிப்பிட்ட ஒரு வங்கிக் கிளையில் சுவப்னா பெயரில் இருந்த ஒரு கிலோ தங்கமும் ஒரு கோடி ரூபாய் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஐக்கிய அரபு சிற்றரசின் அதிகாரிகள் சிலரது உதவியுடன்தான் கேரளாவுக்கு தங்கம் கடத்தி வரப்பட்டதாக சுவப்னா தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
“சரக்கு விமானத்தில் காய்கறிகள் கொண்டு செல்லும் கொள்கலன்களில்தான் ரொக்கப்பணம் மற்றும் தங்கத்தைப் பதுக்கி வைப்பது வழக்கம். பலமுறை இப்படித்தான் தங்கம் கடத்தினோம்.
“இதில் எங்களுக்கு ஐக்கிய அரபு சிற்றரசின் உதவி கிடைத்தது. அதனால் சிக்கலின்றி தங்கக் கடத்தல் நடைபெற்றது,” என்று சுவப்னா சுரேஷ் தமது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.