புதுடெல்லி: ஊரடங்கு மட்டுமே கொரோனா கிருமித் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்திவிட முடியாது என தேசிய நோய்த்தடுப்பு அமைப்பின் உறுப்பினரும் எய்ம்ஸ் இயக்குநருமான ரஞ்சித் குலேரியா தெரிவித்துள்ளார்.
வீடு வீடாகச் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பதே சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என்று பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு நகரங்களில், வெவ்வேறு காலகட்டங்களில் கிருமித்தொற்றுப் பரவல் உச்சத்தை அடையும். தற்போது டெல்லி, மும்பை, அகமதாபாத் மற்றும் தென்மாநிலங்களின் சில நகரங்களில் கொரோனா கிருமி வளைகோடு சரியத் துவங்கியுள்ளது," என்று ரன்தீப் கூறியுள்ளார்.
கொரோனா வளைகோடு சரிகிறது என்பதற்காக தற்போது மேற்கொண்டுவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் குறைத்துவிடக்கூடாது என அவர் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் நோய்ப்பரவல் குறைந்தவுடன் தங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துவிட்டதாகக் கருதி பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல், சமூக விலகலைப் பின்பற்றாமல் இருந்தால் அடுத்த அலை ஏற்பட்டுவிடும் என்றும் ரன்தீப் எச்சரித்துள்ளார்.
மழைக்காலம், குளிர்காலம் வந்துவிட்டால் சளிக் காய்ச்சல் பரவும் என்பது கவலைக்குரிய விஷயம் என்று குறிப்பிட்டுள்ள அவர், கொவிட்-19 நோயை ஏற்படுத்தும் கொரோனா கிருமி இதுவரை மனிதர்கள் அறியாத ஒன்று என்பதால் அது எவ்வாறு செயல்படும் என்பது தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.

