புதுடெல்லி: அனைத்துலக அளவில் தங்கம் விலை நேற்று புதிய உச்சத்தைத் தொட்டது. தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பினர்.
பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கொரோனா கிருமிப் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில் தங்கம் விலை பெரிய அளவிலான உயர்வையும் சிறிய இறக்கத்தையும் சந்தித்து வருகிறது.
இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.74 உயர்ந்து ரூ.4,978 ஆக விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு ரூ.592 உயர்ந்து ரூ.39,824 என்று விற்பனையானது.
இதேபோல் 24 காரட் தங்கத்தின் விலை 8 கிராம் 41,816 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை கிராமுக்கு 3.90 ரூபாய் உயர்ந்து 70.80 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தமிழகத்தில் வரலாற்றில் இது வரை இல்லாத அளவுக்கு ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் 40,000 ரூபாயைக் கடந்து உள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.872 உயர்ந்து ரூ.40,104க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது ஆடி மாதம் என்பதால் விலை குறையும் என இந்தியர்கள் தரப்பில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதற்கு மாறாக விலை உயர்ந்து வருவது நடுத்தர மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
சிங்கப்பூரில் நேற்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் 82 வெள்ளிக்கு உயர்ந்தது.

