கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்ட இந்திய வர்த்தகர் ஒருவர் தன்னுடைய அலுவலகத்தை 85 படுக்கைகள் கொண்ட கொரோனா இலவச சிகிச்சை மையமாக மாற்றியுள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதாகக் கூறப்படும் வேளையில், வசதி குறைந்தவர்கள் அரசு மருத்துவமனைகளை மட்டுமே நாடவேண்டிய சூழல்.
ஆனால், அரசு மருத்துவமனைகளில் படுக்கை உட்பட சிகிச்சை வசதிகள் போதிய அளவுக்கு இல்லாததால் ஏழைகள் பாடு திண்டாட்டமாக உள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த காதர் ஷேக் எனும் அந்த வர்த்தகர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சுமார் 20 நாட்களாக சூரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கான கட்டணத்தைப் பார்த்து கலங்கிப்போனர்.
வசதி குறைந்த கொரோனா நோயாளிகளுக்கு உதவ எண்ணி, அதிகாரிகளின் அனுமதியுடன் தனது 30,000 சதுர அடி அலுவலகத்தை சிகிச்சை மையமாக மாற்றினார் அவர்.
சிகிச்சைக்கான மருத்துவ ஊழியர்கள், உபகரணங்கள், மருந்து போன்றவற்றை அரசாங்கம் வழங்குகிறது.
"எந்த வேறுபாடுமின்றி யார் வேண்டுமானாலும் இங்கு சிகிச்சை பெறலாம்," என்று திரு காதர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.5 மில்லியனைக் கடந்தது; 35,000க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.


