திருப்பூர்: அவினாசியில் செயல்படும் தனியார் ஆலை ஒன்றில் குறைந்தபட்சம் 70 சிறார்கள் கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டு இருந்த சம்பவம் அம்பலமாகி இருக்கிறது.
அந்தச் சிறார்கள் பல பகுதிகளில் இருந்தும் இ-பாஸ் எனப்படும் அனுமதியைப் பெறாமல் அந்த ஆலைக்கு சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்டு இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
அவர்களை திருப்பூர் மாவட்ட அதிகாரிகள் மீட்டு இருக்கிறார்கள். சிறார்களில் 40 பேர் தங்கள் விருப்பத்திற்கு மாறாக தங்களை ஆலையில் அடைத்து வைத்து வேலை வாங்குவதாகத் தெரிவித்து இருக்கிறார்கள்.
அவினாசியில் ஆலத்தூர் என்ற பகுதியில் செயல்படும் தனியார் ஆலையில் கொத்தடிமைக் கொடுமை நடப்பதாக தகவல் வந்தததை அடுத்து சமூக நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர்.
போலிஸ் அதிகாரியுடன் அந்த ஆலைக்கு ரகசியமாகச் சென்ற அதிகாரிகள், அங்கு 70 சிறார்கள் கொத்தடிமைகளாக வேலையில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சிறார்களுக்கு 15 முதல் 18 வரை வயது இருக்கும். அவர்கள் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு இருக்கிறார்கள்.
பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் சேர்ந்து படிக்க பணம் சம்பாதிக்கலாம் என்று சொல்லி அந்தச் சிறார்களை ஆலை முதலாளி அழைத்து வந்திருக்கிறார் என்பது தெரியவந்தது.
சிறார்களில் 37 சிறுமிகளும் மூன்று பையன்களும் தங்களுக்கு ஆலையில் வேலை பார்க்க அறவே விருப்பம் இல்லை என்று தெரிவித்தனர்.
சிறார்களுக்கு மாதம் ரூ. 4,000 முதல் ரூ. 5,000 வரை சம்பளம் வழங்கப்பட்டது என்றும் அந்தப் பணம் அவர்களின் பெற்றோர்களுக்கு நேரடியாக அனுப்பப்பட்டது என்றும் அதிகாரிகள் கூறினர்.
எல்லா விவரங்களையும் சிறார்கள் கைப்பட எழுதி அவற்றைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள், பாதிக்கப்பட்ட சிறார்களைத் தற்காலிகமாக பல விடுதிகளுக்கு அனுப்பிவைத்தனர். இது பற்றி மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆலை முதலாளி மீது விரைவில் புகார் பதியப்படும் என்று அதிகாரி குறிப்பிட்டார். சிறார்களில் யாருக்குமே இ-பாஸ் எனப்படும் அனுமதி பெறப்படவில்லை. ஒரு சிறுமியிடம் எந்தவிதமான பத்திரங்களும் இல்லை.
மீட்கப்பட்ட சிறார்களில், அண்மையில் பிளஸ் 2 தேர்வு எழுதிய சிலரும் இருந்தனர். அந்தத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதுகூட அவர்களுக்குத் தெரியவில்லை. இத்தகைய விவகாரங்களைக் கடுமையாகக் கருதுவதாகவும் குற்றம் செய்வோர் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள்.

