கொவிட்-19: இந்தியாவில் 16 லட்சம் பேர் பாதிப்பு: மரண எண்ணிக்கை 34 ஆயிரமானது

2 mins read
4bb91254-2bcc-4a78-b3fd-d9865ef93419
புதுடெல்லியில் உள்ள கொவிட்-19 பராமரிப்பு மற்றும் தனிமைப்படுத்தும் நிலையத்தில், யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் இவர்கள். படம்: இபிஏ -

புதுடெல்லி: கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை இந்தியாவில் 16 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதுவரை சுமார் 35 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன்தினம் ஒரேநாளில் சுமார் 52 ஆயிரம் பேருக்குக் கொரோனா கிருமி தொற்றியது உறுதி செய்யப்பட்டது.

இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 84 ஆயிரமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதேவேளையில் கொவிட்-19 நோயிலிருந்து இதுவரை சுமார் 1.02 லட்சம் நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

தற்போது நாடு முழுவதும் சுமார் 5.28 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை இல்லாத அளவிற்கு நாடு முழுவதும் மரண விகிதம் 2.23 விழுக்காடாகக் குறைந்துள்ளது என சுகாதார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பதிவான மரண விகிதத்தில் இதுவே ஆகக்குறைவான அளவாகும்.

மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து அமைத்த வியூகமே இந்த முன்னேற்றத்துக்கு காரணம் என சுகாதார அமைச்சு அன்றாட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே ஊரடங்கு தளர்வின் மூன்றாவது கட்டமாக முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இனி இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படும் எனவும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, பண்பாடு, மத நிகழ்ச்சிகளுக்கு ஆகஸ்ட் 31 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய சுதந்திர தினத்தை சமூக இடைவெளியுடன் கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஆகஸ்ட் இறுதிவரை பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும். மதுக்கூடங்கள், நிகழ்ச்சி அரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்களை திறக்கவும் மெட்ரோ ரயில் சேவைக்கும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.