மும்பை: மகாராஷ்டிராவில் ஆகஸ்ட் இறுதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு இதுவரை கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தைக் கடந்துள்ளது.
எனினும் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் காலை ஒன்பது மணி முதல் இரவு ஏழு மணி வரை செயல்பட உள்ளன.
திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் அதிகபட்சமாக ஐம்பது பேரும் இறுதிச்சடங்கு உள்ளிட்ட துக்க நிகழ்வுகளில் இருபது பேரும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கர்நாடகாவில் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த ஒரு வாரமாக அங்கு நாள்தோறும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1.12 லட்சமாகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,147 ஆகவும் அதிகரித்துள்ளது.
இதேபோல் ஆந்திராவிலும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் நேற்று முன்தினம் ஒரேநாளில் அங்கு பத்தாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

