பலி எண்ணிக்கை: உலகளவில் ஐந்தாம் இடத்தில் இந்தியா

பலி எண்ணிக்கை: உலகளவில் ஐந்தாம் இடத்தில் இந்தியா

1 mins read
d49df1f0-19fb-4880-b83f-0b8c0b3aceea
-

புதுடெல்லி: கொரோனா கிருமித் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 35 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதையடுத்து உலகளவில் அதிகமாக உயிரிழந்தோர் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாம் இடத்தை எட்டியுள்ளது. கடந்த ஒரே வாரத்தில் மட்டும் சுமார் ஐந்தாயிரத்துக்கும் அதிகமானோர் கொவிட்-19 நோய்க்குப் பலியாகி உள்ளனர்.

இதற்கிடையே வியாழக்கிழமை ஒரேநாளில் நாடு முழுவதும் சுமார் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புதிதாக கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அன்றைய தினம் மட்டும் 786 பேர் பலியாகினர்.

"இந்தியாவில் கொவிட்-19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,748ஆக அதிகரித்துள்ளது. ஜூலை மாதம் மட்டுமே சுமார் 18 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இத்தாலியை முந்தி அதிகளவில் உயிரிழந்தோர் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது. இத்தாலியில் கொவிட்-19 மரண எண்ணிக்கை 35,132ஆக உள்ளது," என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.38 லட்சத்தைக் கடந்துள்ளது. மாநிலங்களுக்கான பட்டியலில் புதிதாக

11,147 நோயாளிகளுடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இது இந்திய மாநிலங்களில் ஒரே நாளில் பதிவான மிக அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

இதுவரை 10.5 லட்சம் பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். தற்போது சுமார் 5.45 லட்சம் பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றுநோயை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் தினசரி மாதிரிகள் பரிசோதனை எண்ணிக்கை ஆறு லட்சத்தைக் கடந்துள்ளது. இது விரைவில் 10 லட்சமாக அதிகரிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.