கொவிட்-19 ஆய்வுக்காக 150 கி.மீ. தூரம் கார் ஓட்டிச் சென்ற முதல்வர் உத்தவ் தாக்கரே

மும்பை: கொரோனா கிருமித் தொற்று குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ள மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்துக்கு தாமே தனியாக காரோட்டிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்திய அதே வேளையில் பலரது பாராட்டுகளையும் பெற்றுத் தந்தது.

மகாராஷ்டிராவில் கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே நேரடியாகக் களமிறங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அங்கு இதுவரை சுமார் நான்கு லட்சம் பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 14 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.

மும்பையில் பாதிப்பு சற்றே தணிந்துள்ளதாகக் கூறப்பட்டாலும் பிற மாவட்டங்களில் கிருமித் தொற்று அதிகரித்துள்ளது.

இந்நிலையில் புனே நகரின் தற்போதைய நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள முதல்வர் உத்தவ் தாக்கரேவும் அவரது மகனும் அமைச்சருமான ஆதித்ய தாக்கரேவும் அங்கு சென்றனர்.

இதற்காக மும்பையில் இருந்து புனே வரையிலான 150 கிலோ மீட்டர் தூரத்துக்கு தாமே காரோட்டிச் சென்றார் முதல்வர் உத்தவ் தாக்கரே.

புனேயில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர் பின்னர் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

புனேயில் மட்டும் இதுவரை சுமார் 78 ஆயிரம் பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,613 பேர் உயிரிழந்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.