அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி; கம்ப ராமாயணத்தைக் குறிப்பிட்டு உரை

அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி; கம்ப ராமாயணத்தைக் குறிப்பிட்டு உரை

2 mins read
428aee3b-669b-49f9-8dd1-55db272b11e9
அயோத்தி ராமர் கோயில் பூமி பூசையில் பிரதமர் மோடி உட்பட தலைவர்கள் பங்கேற்றனர். படம்: ஊடகம் -
multi-img1 of 3

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, இன்று (இந்திய நேரப்படி) பிற்பகல் 12:15:05 முதல் 12:15:38 வரையிலான காலகட்டத்தில் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

40 கிலோ எடையிலான வெள்ளி செங்கலை பிரதமர் மோடி பதித்து அடிக்கல் நாட்டினார்.

முன்னதாக, இன்று காலை அயோத்திக்கு விமானம் மூலம் சென்ற திரு மோடி, அயோத்தி அனுமன் ஹார்கி கோயிலில் வழிபாடு செய்தார். பின்னர் குழந்தை ராமர் கோயிலுக்குச் சென்று வழிபட்டதுடன் அங்கிருந்த வளாகத்தில் பாரிஜாத மரக்கன்று ஒன்றை நட்டார்.

பின்னர் அடிக்கல் நாட்டும் பூசைகளில் பங்கேற்றார். உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்தி பென் படேல், ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், ஆர்எஸ்எஸ் துணைத்தலைவர் பையாஜி ஜோஷி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநில முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், பாபா ராம்தேவ், விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள், பாஜக தலைவர்கள், சாமியார்கள் என முக்கிய பிரபலங்களும் ராமர் கோவில் பூமி பூசையில் பங்கேற்றனர்.

விழாவில் உரையாற்றியபோது பிரதமர் மோடி, "தமிழில் கம்ப ராமாயணம் உள்ளது போல் பல்வேறு மொழிகளிலும் ராமாயணம் உள்ளது," எனக் கூறினார்.

இதற்கிடையே, கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக 175 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. மேலும் விழாவுக்கான ஏற்பாடுகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டன.

அயோத்தி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. பிரதமரான பிறகு பிரதமர் மோடி அயோத்தியில் சாமி தரிசனம் செய்வது இதுவே முதல் முறை என்று கூறப்பட்டது.

வரும் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இந்த ஆலயப் பணிகள் நிறைவுற்றதும் பிரதமர் மோடி, ராமர் கோயிலை அதிகாரபூர்வமாகத் திறந்துவைப்பார் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்