இந்தியா: கொரோனா பாதிப்பு இரண்டு மில்லியனைக் கடந்தது

இந்தியா: கொரோனா பாதிப்பு இரண்டு மில்லியனைக் கடந்தது

2 mins read
1319056b-c423-479a-a719-ec0cc5603495
கொரோனா பரவலைத் தடுக்கத் தவறிவிட்டதாகக் கூறி தெலுங்கானா மாநில அரசுக்கு எதிராக ஹைதராபாத் நகரில் நேற்று கறுப்பு பலூன்களைப் பறக்க விட்டு போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர். படம்: ஏஎஃப்பி -

இந்தியாவில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியனைத் தாண்டிவிட்டது.

ஆசியாவிலேயே கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக நேற்று முன்தினம் ஒரே நாளில் புதிதாக 62,538 பேர் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, அங்கு கொரோனா தொற்று கண்டோரின் எண்ணிக்கை 2,027,075ஆக உயர்ந்தது. கடந்த 21 நாட்களில் மட்டும் அங்கு ஒரு மில்லியன் பேரை கொரோனா தொற்றிவிட்டது.

கடந்த மூன்று நாட்களில் உலகிலேயே அதிகமாக கொரோனா தொற்றுச் சம்பவங்கள் இந்தியாவில்தான் பதிவாகி இருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, பிரேசிலுக்குப் பிறகு இரண்டு மில்லியன் என்ற விரும்பத்தகாத மைல்கல்லை எட்டிய மூன்றாவது நாடு இந்தியாதான். சிறிய நகரங்களிலும் ஊரகப் பகுதிகளிலும் கொரோனா பரவி வருவதால் இந்தியாவில் அது உச்சத்தை எட்ட இன்னும் பல மாதங்கள் ஆகலாம் என நோய்த்தொற்றியல் நிபுணர்கள் கணித்து இருக்கின்றனர்.

கிட்டத்தட்ட 1.3 பில்லியன் மக்கள்தொகையைக் கொண்டுள்ள இந்தியா பல கட்ட கிருமிப் பரவலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்கிறார் புதுடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவ, சுகாதார நிலையத்தின் தலைவர் ரஜிப் தாஸ்குப்தா.

இந்தியாவில் கொரோனா பரிசோதனை விகிதம் ஒரு மில்லியன் பேருக்கு 16,035 என்ற அளவில் உள்ளது. இது மிக மிகக் குறைவு என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. அமெரிக்காவில் இவ்விகிதம் மில்லியன் பேருக்கு 190,000ஆக இருக்கிறது.

ஆயினும், கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு கிட்டத்தட்ட 2% எனும் அளவிலேயே இருப்பது சற்று ஆறுதல் தரும் தகவல். கொரோனாவால் இந்தியாவில் இதுவரை 41,585 பேர் இறந்துவிட்டனர்.

இதனிடையே, உலகளவில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,000,553ஆகவும் மாண்டோர் எண்ணிக்கை 712,315ஆகவும் உயர்ந்து விட்டது.

அமெரிக்கா, பிரேசில் ஆகிய இரு நாடுகளில் மட்டும் மொத்த பாதிப்பில் 40% பதிவாகி இருக்கிறது. கொரோனா தொற்றால் ஆக மோசமாக பாதிக்கப் பட்டுள்ள அமெரிக்காவில் 4,870,367 பேரையும் இரண்டாமிடத்தில் இருக்கும் பிரேசிலில் 2,912,212 பேரையும் அந்நோய் தொற்றிவிட்டது.